
மியான்மரில் கடந்த 2021-ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் ஆங் சான் சூகி உள்ளிட்டோரை சிறையில் அடைத்தது. அன்று முதல், ராணுவ ஆட்சிக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கிளர்ச்சிக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. பல நகரப் பகுதிகள் இந்தக் கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்தச் சூழலில், மியான்மரின் சஹாயிங் மாகாணம், மவ்யா மாவட்டத்தில் உள்ள சாங்-யூ நகரம் மக்கள் பாதுகாப்புப் படை (People’s Defence Force) என்ற கிளர்ச்சியாளர்கள் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு, பவுர்ணமியையொட்டி புத்த மதத்தினரின் முக்கியப் பண்டிகையான தடிங்யட் முழு நிலவு விழா (Thadingyut Full Moon Festival) அந்தப் பகுதியில் கொண்டாடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாரகிளைடர் மற்றும் பாரசூட்களில் வந்த ராணுவ வீரர்கள், மத நிகழ்ச்சிக்காகக் கூடியிருந்த பொதுமக்கள் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்த கோரச் சம்பவத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.