
வாஷிங்டன், அக். 19:-
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், அவர் குறித்து மனைவி மெலானியா டிரம்ப் முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். ‘ ஆபாசமான வார்த்தைகள் பேச எனது கணவர் தூண்டப்பட்டார்’ என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கடந்த 2005-ம் ஆண்டு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் பில்லி புஷ்சுடன் பேசிய தனிப்பட்ட உரையாடலை சமீபத்தில், வாஷிங்டன் டைம்ஸ் நாளேடு வௌியிட்டது.
அந்த வீடியோவில், டிரம்ப் பெண்கள் குறித்து மிகவும் ஆபாசமாகவும், மோசமாகவும் பேசியிருந்தார். இந்த வீடியோ அமெரிக்கா முழுவதும், டிரம்பின் புகழுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது, பெண்கள் தரப்பில் பெரும் கண்டனத்தையும் எழச் செய்தது.
இந்நிலையில், தனது கணவர் டிரம்ப் குறித்து முதல் முறையாக அவரின் மனைவி மெலானியா டிரம்ப் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ என் கணவர் டிரம்ப் பேசிய வார்த்தைகள் தகுதியான வார்த்தைகள் அல்ல என நான் எனது கணவரிடம் தெரிவித்தேன். இந்த வார்த்தைகள் ஏற்றுக் கொள்ள முடியாது. எனக்கு தெரிந்தவரை இப்படிப்பட்ட நபர் அவர் இல்லை என்பதால், நான் அந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
அந்த கேரவனில், டிரம்ப்பும், நிகழ்ச்சி தொகுப்பாளரும், தனிப்பட்ட முறையில் பேசியிருந்தனர். ஆனால், அவர் தவறாக வழிநடத்தப்பட்டு, மோசமான வார்த்தைகளைப் பேச தூண்டப்பட்டார்.
நீங்கள் அந்த வீடியோ ஆதாரத்தைப் பார்த்தால், அதில் கேமரா ஆன் செய்யப்படவில்லை, மைக் மட்டுமே ஆன் செய்யப்பட்டு இருந்தது. ஒருவேளை மைக் ஆன் செய்திருந்தது தெரிந்தே அவர்கள் இப்படி பேசினார்களா? என நான் ஆச்சர்யப்பட்டேன்.
ஆனால், எனது கணவர் இது போல் வார்த்தைகளை பயன்படுத்தி நான் கேட்டது இல்லை. அதனால்தான் நான் வியப்படைந்தேன். எனது கணவருக்கு இது போல் பேசுவதற்கு முடியுமா, தனிப்பட்ட முறையில், இதுபோன்ற கருத்தை தெரிவித்திருப்பாரா என்பது தெரியவில்லை'' எனத் தெரிவித்தார்.