
லண்டன், அக். 19:-
நாட்டையே அதிரவைத்த 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறையில், 23 முஸ்லிம்கள் மக்களை உயிரோடு தீவைத்து கொளுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சமிர்பாய் வினுபாய் படேல்(வயது40) லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியா கொண்டு வரப்படுகிறார்.
கடந்த 1992-ம் ஆண்டு நாடு கடத்தல் ஒப்பந்தத்தை இந்தியாவும், இங்கிலாந்தும் செய்துகொண்டபின், கடந்த 24 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக ஒருவர் இந்தியா கொண்டு வரப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002-ம் ஆண்டு, மார்ச் 1-ந்தேதி குஜராத்தின் ஆனந்த் மாவட்டம், ஒடே கிராமத்தில் நடந்த கலவரத்தில், முஸ்லிம் மக்கள் 23 பேரை உயிரோடு ஒருவீட்டில் வைத்து ஒரு கும்பல் தீ வைத்து கொளுத்தினர். இதில் அனைவரும் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் சமிர்பாய் வினுபாய் படேல் தவிர்த்து இரு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால், சமிர்பாய் படேல் லண்டனுக்கு தப்பிச்சென்றார்.
இந்த வழக்கு விசாரணைக்காக சமீர்பாய் படேலை கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என இங்கிலாந்து அரசிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதைத்தொடர்ந்து ஸ்காட்லாண்டு போலீசார் லண்டனின் மேற்குப்பகுதியில் உள்ள ஹான்ஸ்லோ பகுதியில் வசித்து வந்த சமீர்பாய் வினுபாய் படேலை கைது செய்தனர்.
இது குறித்து ஸ்காட்லாண்டு யார்டு போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஹான்ஸ்லோ பகுதியில் தங்கியிருந்த சமீர் வினுபாய் படேலை கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கைது செய்தோம். அதன்பின் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “ உள்துறை செயலாளர் அம்பர் ரூட் கடந்த மாதம் 22-ந்தேதி சமீர் வினுபாய் படேலே இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்த ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளார்.
குஜராத் கலவரத்தில் தொடர்புடைய வினுபாய் படேல் மீது கொலை, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு நிலுவையில் உள்ளது. இது குறித்து இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க வினுபாய் கைது செய்யப்பட்டார். அவர் விரைவில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.