மரண தண்டனையில் இருந்து தப்பினாரா முஷாரஃப் ? லாகூர் ஹைகோர்ட் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jan 13, 2020, 9:15 PM IST
Highlights

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லாது என லாகூர் ஐகோர்ட்  அதிரடியாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த முஷாரஃப்  2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அந்நாட்டின் அதிபரானார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15-ந் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது.

புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியதற்காகவும், நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்காகவும் முஷாரஃப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு, இஸ்லாமாபாத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முஷாரஃப்  தரப்பில் லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், முஷாரஃப்  மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்தது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று இன்று தீர்ப்பு வழங்கியது. 

மேலும் முஷாரஃப்  மீதான தேசத்துரோக வழக்கு சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதன்மூலம் முஷாரஃபுக்கு எதிரான மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுமா? செல்லாதா? என்பது பற்றி நீதிபதிகள் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. இருப்பினும், சிறப்பு நீதிமன்றம் அமைத்தது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று கூறியிருப்பதால், அந்த  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் செல்லுபடியாகாது என முஷாரஃப்பின்  வழக்கறிஞர்  தெரிவித்துள்ளார்.

click me!