சக ஊழியர்களை அலுவலகத்தில் வைத்து பூட்டியவருக்கு ரூ.2.46 லட்சம் அபராதம் விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வேலை பறிபோன விரக்தியில் சக ஊழியர்களை அலுவலகத்தில் வைத்து பூட்டிய லிம் சியோங் ஹாக் (52) என்பவருக்கு இந்திய மதிப்பில் ரூ.2,46,173 லட்சம் அபராதம் விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலுவலகத்தின் பிரதான கதவை பூட்டிய அவர், சக ஊழியர்கள் 9 பேரை சுமார் ஒரு மணி நேரம் அடைத்து வைத்துள்ளார்.
நீதிமன்ற விசாரணையின் போது, லிம் சியோங் ஹாக் தனது சக ஊழியருக்கு தவறான செய்தியை அனுப்பியதாக மற்றொரு குற்றச்சாட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், லிம் சியோங் ஹாக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள ஒரு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உதவியாளராக தனது பணியை கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் லிம் சியோங் ஹாக் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து, ஜூலை 1, 2022 அன்று பணியில் சேர்ந்த அவர், அதே ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி நபருக்கு 18 ஆண்டுகள் தடுப்புக் காவல், 12 கசையடி.. சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு..
பணிநீக்கம் செய்யப்பட்டதில் அதிருப்தி அடைந்த அவர், செப்டம்பர் 1, 2022 அன்று மதியம் 2.20 மணியளவில் அவர் பணிபுரிந்த அலுவலகத்தின் பிரதான கதவை பூட்டு போட்டு பூட்டியுள்ளார். அப்போது, மொத்தம் ஒன்பது ஊழியர்கள் அலுவலகத்திற்குள் இருந்துள்ளனர்.
லிம் கதவைப் பூட்டிய சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு ஊழியர் கழிப்பறைக்குச் செல்வதற்காக அலுவலகத்தை விட்டு வெளியேற முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை. கதவு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்த அவர், இதுகுறித்து சக ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர், பூட்டு தொழிலாளி ஒருவரை வரவழைத்து அந்த பூட்டை அகற்றியுள்ளார்.
தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் லிம்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு சிங்கப்பூரில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டு சேர்த்து தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.