மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் சீன ஆதரவு அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது
இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 368 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். சுமார் 2,85,000 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில், ஆளுங்கட்சியான அதிபர் முலமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி), பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இதில், முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி சீன ஆதரவு நிலைப்பாட்டுடைய கட்சி.
undefined
இந்த நிலையில், மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், சீன ஆதரவு அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 93 தொகுதிகளில் 90 தொகுதிகளில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி களம் கண்டது. அதில், 66 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. 86 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமாக 66 தொகுதிகளில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மாலத்தீவின் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சீன ஆதரவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனின் பினாமியாக களமிறங்கி முகமது முய்சு வெற்றி பெற்றார். மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்ஸு தேர்வானதில் இருந்தே அந்நாட்டுடனான இந்தியாவின் உறவு சுமூகமாக இல்லை. மாலத்தீவின் புதிய அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவாக உள்ளதாகவும், இது தமது தேசிய பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளதாகவும் இந்தியா வருத்தம் தெரிவித்தது. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்களின் தரக்குறைவான விமர்சனங்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
இந்திய இராணுவத் துருப்புக்களை வெளியேற்றுவது, சீன அரசுக்கு உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களை வழங்குவது, குறிப்பாக சீன உளவுக் கப்பலை அதன் தலைநகர் மாலேயில் சர்ச்சைக்குரிய வகையில் நிறுத்திவைத்தது போன்றவை இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவுகளை மேலும் மோசமடைய செய்தன.
இந்த பின்னணியில் முகமது முய்சுவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது இந்தியாவுக்கு கண்டிப்பாக கவலையை ஏற்படுத்தும். அதேசமயம், சீனாவுக்கு ஆதரவான கொள்கைகளை அவர் நாடாளுமன்றத்தில் முன்வைக்க இந்த வெற்றி உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.