கொரோனாவை தடுப்பதற்காக ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஊரடங்கை நீட்டித்துள்ளார் மலேசிய பிரதமர்.
கொரோனாவால் உலகம் முழுதும் 41 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுப்பதற்காக வேறு வழியின்றி கட்டாயத்தின் பேரில் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
மலேசியாவில் இதுவரை 6656 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 108 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மலேசியாவில் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அறிவிப்பு வெளியிடும்போது மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின் மக்களிடம் மன்னிப்பு கோரினார். இதுகுறித்து பேசிய மலேசிய பிரதமர், கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், அதை தடுக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் ஆலோசிக்கப்பட்டது. நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 9ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பு, ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. யாரும் மாநில எல்லைகளை கடந்து சொந்த ஊர்களுக்கு செல்ல முயற்சிக்க வேண்டாம். இது கட்டாயத்தால் எடுக்கப்பட்ட முடிவு. மக்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்று மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்.