இது ஒரு மனநோய்.. கொரோனாவை கொஞ்சம் கூட மதிக்காத ஒரே நாடு.. 2ம் உலகப்போரின் பிரம்மாண்ட வெற்றி கொண்டாட்டம்

By karthikeyan VFirst Published May 10, 2020, 5:11 PM IST
Highlights

கொரோனாவை கொஞ்சம் கூட மதிக்காமல் ஒரேயொரு நாடு மட்டும் எப்போதையும் போலவே இயல்பாக அனைத்து நடவடிக்கைகளையும் அச்சமின்றி மேற்கொண்டுவருகிறது. அதுகுறித்து பார்ப்போம்.
 

உலகளவில் 41 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அமெரிக்கா தான் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மனித குலத்திற்கே சவாலாக திகழும் கொரோனாவை சமாளிக்க முடியாமல் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவே, திணறிவருகிறது. 

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரிட்டன், இத்தாலி, ஸ்பெய்ன், ஜெர்மனி என ஐரோப்பிய நாடுகள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவை தடுத்து விரட்ட, தனிமனித இடைவெளியை பின்பற்றுவதே ஒரே வழி என்பதால் அனைத்து நாடுகளும், பொருளாதார இழப்பை பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்களை காக்க, ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தி தனிமனித இடைவெளியை வலியுறுத்திவருகின்றன. அதனால் அனைத்துவிதமான சமூக, பொருளாதார செயல்பாடுகளும் முடங்கியதோடு, அரசு மற்றும் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒரேயொரு நாடு மட்டும் கொரோனாவை பொருட்படுத்தாமல் இயல்பு நிலையிலேயே உள்ளது. ஆம்.. ஐரோப்பிய நாடான பெலாரஸ் தான் அது. 

கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸில், இதுவரை 22 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 126 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அந்த நாட்டு அரசு, ஊரடங்கை அமல்படுத்தவில்லை. கொரோனாவால் உலக நாடுகள் அஞ்சி நடுங்கும் நிலையில், கொரோனா என்பது ஒரு மனநோய். மக்கள் எப்போதும் போலவே இயல்பாக இருங்கள். ஓட்கா குடியுங்கள் என்றெல்லாம் துணிச்சலுடன் பேசும் அந்நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகசங்கோ, ஊரடங்கை அமல்படுத்தவில்லை.

கொரோனாவை கண்டு பயப்படுவதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் அந்த நாடு திகழ்கிறது. பெலாரஸ் அரசாங்கம், ஊரடங்கை அமல்படுத்தவில்லையென்றாலும், மக்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்தி கொள்கின்றனர். பொதுப்போக்குவரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்தவில்லை. 

ஊரடங்கு அமல்படுத்தப்படாதது ஒருபுறமிருக்க, உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளையும் சற்றும் பொருட்படுத்தாமல் தனிமனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு, அந்த நாட்டில் இரண்டாம் உலக போரின் வெற்றியை, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன், பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். அந்த வெற்றி கொண்டாட்டத்தில் தனிமனித இடைவெளி என்பதே கடைபிடிக்கப்படவில்லை. 

கொரோனாவை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருக்கும் பெலாரஸின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகசங்கோ, அதிகாரப்பூர்வமற்ற சர்வாதிகாரி. ஆம்.. அவர் சர்வாதிகாரி இல்லையென்றாலும், அவரது செயல்பாடுகள் அனைத்துமே சர்வாதிகார போக்கு கொண்டவை. அந்நாட்டில் அவர் நினைத்தால் நாடாளுமன்றத்தையே கலைத்துவிட முடியும். அரசு கஜானாவில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்க முடியும். அவரை ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்றே அழைக்கின்றனர்.

கொரோனாவை எதிர்கொள்ளுமளவிற்கு மருத்துவ உட்கட்டமைப்பில்லாத நாடு என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஜெர்மனிக்கு நிகரான மருத்துவ வசதிகளை கொண்ட நாடு தான். ஆனாலும் கொரோனாவை கண்டுகொள்ளவேயில்லை. அங்கு 22 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 126 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அரசு தரப்பில் சொல்லப்படும் தகவல்கள் பொய் என்றும் உயிரிழக்கும் பலர், நிமோனியா மற்றும் மாரடைப்பால் உயிரிழப்பதாக பொய் கூறுவதாக சொல்லப்படுகிறது. அதேபோல கொரோனா பாதிப்பு குறித்து உண்மையான புள்ளிவிவரங்கள் மறைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. 

ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இரண்டாம் உலக போரின் வெற்றியை கொண்டாடியுள்ளது பெலாரஸ்.
 

click me!