
239 பயணிகளுடன் மாயமான MH370 மலேசிய விமானத்தின் சிக்னல்கள் வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டு, கடலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி 239 பேருடன் புறப்பட்டுச்சென்ற எம்.ஹெச்-370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் மாயமானது. அதன் பின் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்துவிட்டதாக மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் பல்வேறு யூகங்களின் அடிப்படையில், விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு ஈடுபட்டு வருகிறது. கான்பெரேரா நகரில் கூடிய இந்த குழு, மலேசியா விமானம் மாயமானபோது செயற்கைக்கோளுடன் அதன் சிக்னல் நிலையாக இருந்ததாகவும், எனினும் திடீரென துண்டிக்கப்பட்டு விமானத்தின் பாதை திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் தெரிவித்துள்ளது.
ஒரு லட்சம் கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமானத்தை தேடும் பணி வரும் ஜனவரி மாதம் வரை நடைபெறும் என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.