கிழக்கு லடாக் பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்களை மகாராஷ்டிரா அரசு ரத்து செய்துள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்களை மகாராஷ்டிரா அரசு ரத்து செய்துள்ளது. இதற்கான தகவலை அம்மாநில தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்துள்ளார். எல்லையில் ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மகாராஷ்டிரா அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி எல்லையில் சீனா ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் திங்கட்கிழமை (ஜூன்-15) இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் சீனர்களுடன் போராடி இத்தனை எண்ணிக்கையில் இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது, இதனால் ஒட்டு மொத்த நாடே சீனாவுக்கு எதிராக கொந்தளித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு, சீன நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய், மேக்னடிக் மகாராஷ்டிரா 2.0 முதலீட்டாளர்கள் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது, அப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் சுமார் 16,000 கோடி அளவுக்கு மகாராஷ்டிரா அரசு ஒப்பந்தங்களை செய்துகொண்டது.
அதில் சீனாவை சேர்ந்த மூன்று நிறுவனங்களுடன் 5 ஆயிரத்து 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின,கிரேட் வால் மோட்டார்ஸ் என்ற சீன நிறுவனத்துடன் இணைந்து புனேவில் ஆட்டோமொபைல் தொழிற்சாலை தொடங்க 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய்க்கும், போடான் என்ற நிறுவனத்துடன் 1000 கோடிக்கும், மற்றொரு நிறுவனத்துடன் 250 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அதாவது, கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன படைகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலுக்கு சற்றுமுன்னரே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதையடுத்து, சீனாவின் பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற முழக்கம் நாடுமுழுவதும் எழுந்துள்ளது. எனவே சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தத்தை அதிரடியாக மகாராஷ்டிர அரசு ரத்து செய்துள்ளது. மேலும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்ததாகவும் சுபாஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.