
Lufthansa plane flies without a pilot: உலகளவில் அதிக அளவு உயிர்களை பலி வாங்கும் விபத்துகளில் விமான விபத்துகள் முக்கியமானவை. விமானங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனம் சிதறினாலும் விபத்துகள் ஏற்படும் ஆபத்து அதிகம். நிலைமை இப்படி இருக்க கடந்த ஆண்டு நடுவானில் விமானியே இல்லாமல் 10 நிமிடங்கள் ஒரு விமானம் பறந்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது. அதாவது ஜெர்மனியின் பிராங்பேர்ட்டிலிருந்து செவில்லுக்குச் சென்ற லுஃப்தான்சா விமானம் தான் விமானி இல்லாமல் பறந்துள்ளது.
விமானியே இல்லாமல் பறந்த விமானம்
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி 199 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் ஏர்பஸ் A321 விமானம் புறப்பட்டு நடுவானில் சென்று கொண்டிருந்த வேளையில் முதன்மை விமானி கழிவறைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் விமானத்தை இயக்கிய துணை விமானி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். ஆனால் நல்ல வேளையாக விமானம் தானியங்கி முறையில் இயங்கும் autopilot முறை ஆக்டிவேக்ட் ஆக இருந்ததால் விமானம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சீராக பறந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மயங்கி விழுந்த துணை விமானி
துணை விமானி மயங்கியதும் அவர் செயலிழந்திருப்பதை குறிவைக்கும் வகையில் விமானியின் கேபினில் அவசரகால எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. தொடர்ந்து சிறிது நேரம் கழித்து கழிவறையில் இருந்து வந்த முதன்மை விமானி, துணை விமானி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதன்பிறகு விமானத்தை இயக்கிய அவர் மாட்ரிட் விமானத்தை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.
விமானம் அவசரமாக தரையிறக்கம்
அங்கு பச்சைக்கொடி காட்டியதும் விமானி மாட்ரிட் விமானநிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதால் அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் மயங்கி கிடந்த துணை விமானியை மீட்டு மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து லுஃப்தான்சா விமான நிறுவனம் தீவிர விசாரணை நடத்தியது.
பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
இந்த சம்பவம் விமானி கேபினில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விமானக் குழுவினரின் மருத்துவ கண்காணிப்பு குறித்து கவலை அளிக்கிறது. நல்ல வேளையாக இதில் பெரும் அசாம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் எந்த பயணிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லுஃப்தான்சா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.