
அமெரிக்காவின் ஹேவர்ட் ஃபீல்டில் நடைபெற்ற NCAA வெளிப்புற தடகள தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய வீரர் லோகேஷ் சத்யநாதன் (Lokesh Sathyanathan), தார்லேடன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் தடகள வரலாற்றில் முதன்முறையாக ஆல்-அமெரிக்கன் அந்தஸ்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து, தனது வாழ்நாளில் முதல் முறையாக 'ஃபர்ஸ்ட் டீம் ஆல்-அமெரிக்கன்' கவுரவத்தை அவர் பெற்றுள்ளார். சத்யநாதன் முன்னதாக இந்த சீசனில் உட்புற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2023இல் தனது முதல் வெளிப்புற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் 'செகண்ட் டீம் ஆல்-அமெரிக்கன்' அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இது ஒரு சிறப்பான நாள். இந்த இளைஞரைப் பற்றியும், இந்த ஆண்டு முழுவதும் அவர் செய்த கடின உழைப்பைப் பற்றியும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இன்று அவர் களத்தில் இறங்கி செயல்பட்ட விதம் மிகவும் ஈர்க்கக்கூடியது!” என்று தலைமைப் பயிற்சியாளர் பாபி கார்ட்டர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முதல் இந்திய வம்சாவளி வீரர்
சத்யநாதன் 'பவர் ஃபோர்' கான்பரன்ஸ் அல்லாத ஜம்பர்களில் சிறந்த இடத்தைப் பிடித்தார். முதல் எட்டு இடங்களுக்குள் வந்து, 'ஃபர்ஸ்ட் டீம் ஆல்-அமெரிக்கன்' கவுரவத்தைப் பெற்ற 'பவர்' கான்பரன்ஸ் அல்லாத இரண்டு ஜம்பர்களில் இவரும் ஒருவர். 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் 'ஃபர்ஸ்ட் டீம் ஆல்-அமெரிக்கன்' அங்கீகாரத்தைப் பெற்ற ஐந்தாவது WAC ஜம்பர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
2000ஆம் ஆண்டுக்குப் பிறகு WAC நீளம் தாண்டுதலில் மூன்றாவது சிறந்த தரவரிசையை லோகேஷ் சமன் செய்தார். அவரது சிறந்த ஜம்ப் 7.83 மீட்டர். 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு NCAA சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு WAC தடகள வீரர் செய்த இரண்டாவது சிறந்த ஜம்ப் இதுவாகும். 2001 இல் 7.97 மீட்டர் தாண்டி நான்காவது இடத்தைப் பிடித்த TCU-ன் டார்விஸ் பாட்டனுக்குப் பின்னால் இவர் உள்ளார்.
லோகேஷ் சத்யநாதன் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் 'ஆல்-அமெரிக்கன்' அந்தஸ்தைப் பெற்ற முதல் இந்திய வம்சாவளி தடகள வீரர் ஆவார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இவர், இந்த ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் நான்கு இந்திய வம்சாவளி வீரர்களில் ஒருவர்.
“இது வெறும் ஆரம்பம்”
விருது வழங்கும் விழாவிற்குப் பிறகு சத்யநாதன் கூறுகையில், “ஒவ்வொரு நாளும் கடினமாக பயிற்சி செய்து உழைக்கிறேன். தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு வந்து 'ஆல்-அமெரிக்கன்' கவுரவம் பெற்றது மிகவும் நம்பமுடியாதது. கடவுள், என் குடும்பம், பயிற்சியாளர் கார்ட்டர், எனது தடகள பயிற்சியாளர் கியோ ஷிமோசாவா மற்றும் தார்லேடன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது வெறும் ஆரம்பம்தான். மீண்டும் வருவோம்” என்றார்.