
கடந்த ஆண்டு குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் ஏற்பட்ட கோரமான தீ விபத்தில் உயிரிழந்த 46 இந்தியர்கள் உட்பட மொத்தம் 49 ஊழியர்களின் குடும்பங்களுக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளுக்கு இந்தத் தொகை மாற்றப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள NBTC நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இந்தியரான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஜி.ஆபிரகாம், 49 ஊழியர்களின் வாரிசுகளின் வங்கிக் கணக்குகளுக்கு இந்தத் தொகையைச் செலுத்தினார்.
ரூ.17.31 கோடி இன்சூரன்ஸ்:
NBTC நிறுவனம் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 49 ஊழியர்களுக்கான 6,18,240 குவைத் தினார்கள் (தோராயமாக ரூ.17.31 கோடி இந்திய ரூபாய்) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உயிரிழந்த ஊழியர்களின் 48 மாத சம்பளத்திற்குச் சமமானதாகும்.
இந்த நிகழ்வில் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகப் பிரதிநிதிகள், NBTC நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். நாதிர் அல் அவடி, ஹமத் என்.எம். அல் பத்தா, இப்ராஹிம் எம். அல் பத்தா, மற்றும் வளைகுடா காப்பீட்டுக் குழு (GIG) பஹ்ரைன்-இன் பொது மேலாளர் அப்துல்லா அல் குலைஃபி ஆகியோர் பேசினர்.
NBTC குரூப் லைஃப் இன்சூரன்ஸ்:
NBTC-யின் சிறப்புக் காப்பீட்டுத் திட்டம் குரூப் லைஃப் இன்சூரன்ஸ் என்பது NBTC ஊழியர்களுக்கு நிறுவனத்தால் குறிப்பாக வழங்கப்படும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். குவைத், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து NBTC ஊழியர்களுக்கும் நிறுவனம் சிறப்புக் காப்பீட்டுத் தொகையை வழங்குவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மங்காப் துயரம்:
மறக்க முடியாத மங்காப் துயரம் கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி நடந்தது. NBTC ஊழியர்கள் தங்கியிருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் உட்பட 46 இந்தியர்களும் மூன்று பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெரும்பாலான தொழிலாளர்கள் தீ விபத்தால் ஏற்பட்ட புகையினால் மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்தது தெரியவந்தது. விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த இழப்பீட்டுத் தொகை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கணிசமான ஆறுதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.