
சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் அபிராமி . இவரது கணவர் விஜய். தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற பெண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், அபிராமிக்கு அப்பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் இருவரும் இருந்துள்ளனர்.
இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்தது மட்டுமல்லாமல் அறிவுரையும் வழங்கினார். இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கணவனை கைவிட்டுவிட்டு, சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தார். இதற்கு தடையாக இருந்த குழந்தைகளை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பிக்க முயன்றார். இதனையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து இவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு சுமார் 8 ஆண்டுகளாக காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி செம்மல் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமி குற்றவாளி என்றும், அவரது கள்ளக்காதலனான மீனாட்சி சுந்தரம் குற்றவாளி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இளம்பெண் அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏழு வருடம் சிறையில் இருந்து விட்டேன். எனவே குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் அபிராமி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.