இந்தியாவுடன் இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை... கடும் கோபத்தில் பிரதமர் இம்ரான் கான்..!

By vinoth kumarFirst Published Aug 23, 2019, 10:54 AM IST
Highlights

பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நம்பத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடத்தப்படும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.

இனி இந்தியாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்ட பிரிவை ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரும் பாகிஸ்தான் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என பல்வேறு நாடுகள் கூறி உள்ளன. 

ஆனால், தீவிரவாதத்தை கைவிட்டால் மட்டும் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டியளிக்கையில், பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நம்பத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடத்தப்படும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. 

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் மேற்கொண்டு விட்டது. இனிமேல் செய்வதற்கு ஏதுமில்லை. இருப்பினும், இந்தியா தொடர்ந்து குறை கூறி வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களை சமாதானப்படுத்தவே இந்தியா அவ்வாறு கூறுவதாக எண்ணத் தோன்றுகிறது. எனவே, இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனிடையே, நியூயார்கில் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள்,’ என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

click me!