இலங்கையில் தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு...!! ராஜபக்ஷவை ஒப்புக்கொள்ள வைத்த செந்தில் தொண்டமான்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 28, 2020, 1:32 PM IST
Highlights

அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்  செந்தில் தொண்டமான்  பதுளை மாவட்ட வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இலங்கை ஊவா மாகாணம் முழுவதும் கைத்தொழில்பேட்டைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பதுளை மாவட்ட வேட்பாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான ராஜபக்ஷ சகோதரர்களின் பொது ஜன பெரமுன, அதாவது (பொது ஜன முன்னணி),  முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியு,  ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் போட்டியிடுகின்றன. ராஜபக்ஷ சகோதரர்களின் பொதுஜன பெரமுனாவுக்கு எதிராக வலுவான கூட்டணி இல்லாததால், தற்போதைய ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில் செந்தில் தொண்டமான் முன்னிலையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி, ராஜபக்ஷ சகோதரர்களின் பொதுஜன பெரமுனாவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. 

அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்  செந்தில் தொண்டமான்  பதுளை மாவட்ட வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில்  ஊவா மாகாணத்தில் 70 தோட்டப் பிரிவுகள் காணப்படும் நிலையில் ஒவ்வொரு 7 தோட்டப் பிரிவுகளுக்கும் ஒரு தொழிற்சாலையை உருவாக்குவது தொடர்பாக செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். நேற்றுமுன்தினம் ஹப்புத்தளையில் நடை பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது, ஊவாவில் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட வேட்பாளர் செந்தில் தொண்டமான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சிறப்பு கோரிக்கையை முன்வைத்திருந்தார். இதுதொடர்பாக பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது  7 தோட்டப் பிரிவுகளுக்கு ஒரு தொழிற்சாலைவீதம் அமைப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் ஊவா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே உருவாக்கப்படும், கொழும்பிலும் நாட்டின் ஏனைய புறநகர் பகுதிகளிலும் குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றிவரும் ஊவா இளைஞர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள், பொற்காலமாக மாறவுள்ளது. 

தோட்டப்புறங்களில் பயன்பாட்டில் இல்லாத 5 ஏக்கர் நிலபரப்பில்  தொழிற்சாலைகள் அமைக்கப்படும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற கம்பனிகளை ஒரு வருடத்திற்கு இரண்டு என்ற அடிப்படையில் அமைப்பதற்கான உத்தரவாதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, செந்தில் தொண்டமானிடம் வழங்கியுள்ளார்.இவ்வாறு உருவாக்கப்படும் ஒரு தொழிற்சாலையில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள்வரை தொழில்வாய்ப்புகளை பெறுவர். அனைவருக்கும் அரசப் பணியை வழங்குவதென்பது முடியாத காரியம், அதிலும் ஒரு தோட்டத்தில் 10 சதவீதமானவர்களுக்கு அரசப் பணிகளை வழங்க முடியும், ஆனால், தனியார் துறைமூலம் அதிக சம்பளத்துடன், இவ்வாறான மாற்றுவழி தொழில்வாய்ப்புகளை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு மலையக தலைமையும் கண்டிறாத திட்டத்தை நினைவாக்கும் முயற்சியை செந்தில் தொண்டமான் முன்னெடுத்துள்ளார். 

ஆகவே, படித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி உள்ள இளைஞர்கள் மற்றும் கொழும்பில் கடினமான சூழலில் பணியாற்றிவரும் ஊவா இளைஞர்களும், தோட்டப்புறங்களில் வேலைவாய்ப்பின்றி அல்லல்படும் இளைஞர்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தமது சொந்த ஊரியில் நெஞ்சை நிமிர்த்தி தன்மானத்துடன் பணிக்கு செல்லும் வாய்ப்பு உருவாகப் போவதாக, ஆட்சியை கைப்பற்ற உள்ள  அரசாங்கத்தின் மூலம் செந்தில் தொண்டமான் உறுதியளித்துள்ளார். 

 

click me!