இத்தாலியில் அதிர்ச்சி..! 100 மருத்துவர்களின் உயிரை காவு வாங்கிய கொரோனா..!

By Manikandan S R S  |  First Published Apr 10, 2020, 10:13 AM IST

உலக மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக இத்தாலியில் கொரோனாவிற்கு மருத்துவர்களின் தொடர் மரணம் அமைந்துள்ளது.


சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 203 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்து 685 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக 15 லட்சத்து 95 ஆயிரத்து 521 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 259 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பலி 1 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் உலக நாடுகள் கடும் அச்சமடைந்துள்ளன.

Latest Videos

உலகளவில் கொரோனாவிற்கு அதிகம் பலியானவர்களின் எண்ணிக்கையில் ஐரோப்பிய நாடான இத்தாலி தொடர்ந்து முதலிடதில் இருக்கிறது. அந்நாட்டில் இதுவரை 1,43,626 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 18,279 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் உலக மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக இத்தாலியில் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் தொடர் மரணம் அமைந்துள்ளது. அங்கு இதுவரை 100 மருத்துவர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்ததால் தொற்று ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையில் கடந்த மாதம் மீண்டும் பணியில் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர்களும் அடங்குவர் என இத்தாலி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மருத்துவர்களுடன் 30 செவிலியர்களும் மருத்துவ பணியாளர்கள் பலரும் கொரோனா தொற்று காரணமாக பலியாகி இருக்கின்றனர். மேலும் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் மருத்துவ துறையைச் சார்ந்தவர்களாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

click me!