காலையில் குட் நியூஸ்..! கொரோனாவை வென்று வீடு திரும்பிய 2 மாத குழந்தை..!

By Manikandan S R SFirst Published Apr 10, 2020, 7:52 AM IST
Highlights

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மிக இளம் வயது நோயாளியாக கருதப்படும் 2 மாதக் குழந்தை தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறது.

சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 203 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்து 685 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக 15 லட்சத்து 95 ஆயிரத்து 521 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 259 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடானா இத்தாலியை அதிகம் பாதித்துள்ளது. உலகளவில் இத்தாலியில் தான் கொரோனா பலி அதிகம் நிகழ்ந்துள்ளது. அங்கு இதுவரை 143,626 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 18,279 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மிக இளம் வயது நோயாளியாக கருதப்படும் 2 மாதக் குழந்தை தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி குழந்தைக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பாரி நகரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

அங்கு குழந்தைக்கு அதன் தாயுடன் தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது குழந்தை பூரண நலம் பெற்றுள்ளது. இதையடுத்து குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா குறித்த அறிகுறிகள் இல்லாத நிலையில், அதன் தாயுடன் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகளவில் 2 மாத குழந்தை ஒன்று கொரோனாவில் இருந்து மீண்டிருப்பது மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

click me!