போரில் ஹமாஸ் பயங்கரவாத ஆட்சி வீழ்த்தி, கடத்தப்பட்ட சுமார் 230 பணயக்கைதிகளையும் மீட்போம் என்று இஸ்ரேலிய ராணுவம் அந்நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளது.
இஸ்ரேலுடனான போர் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனப் பகுதியில் 8,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸ் ஆட்சியில் உள்ள காசாவின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
"இஸ்ரேல் தாக்குதலால் இறந்தவர்கள் எண்ணிக்கை 8,000 ஐ கடந்துள்ளது. அவர்களில் பாதி பேர் குழந்தைகள்" என்று ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை அதிகாலை வெளியிடப்பட்ட கடைசி எண்ணிக்கையில் 7,703 பேர் இறந்துள்ளனர்.
இதனிடையே, சனிக்கிழமையன்று இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது. காசா பகுதியில் உள்ள அனைத்து தகவல் தொடர்புகளையும் துண்டித்த இஸ்ரேல், குண்டுவீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதல்களைத் தொடர்ந்தது. தரைவழித் தாக்குதல்களை விரிவுபடுத்துவதாகக் கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தப் போர் இஸ்ரேலின் இருப்புக்கான போர் என்றும் போர்நிறுத்தம் இப்போதைக்கு இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
போரில் ஹமாஸ் பயங்கரவாத ஆட்சி வீழ்த்தி, கடத்தப்பட்ட சுமார் 230 பணயக்கைதிகளையும் மீட்போம் என்று இஸ்ரேலிய ராணுவம் அந்நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளது. இதன்படி, காசா பகுதியைச் சுற்றிவளைத்துள்ள ராணுவம் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.
காசாவில் இன்டர்நெட் மற்றும் தொலைப்பேசி உள்பட தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த கோடீஸ்வரர் எலான் மஸ்க், தனது ஸ்டார் லிங்க் நிறுவனம் மூலம் காசாவில் இணையசேவை வழங்கத் தயார் என்று என்று கூறினார். அவரது கருத்துக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து காசாவில் இன்டர்நெட் சேவை மீண்டும் வழங்கப்பட்டுவிட்டதாக பாலீஸ்தீன அரசு தெரிவித்துள்ளது.