காசாவுக்குள் நிவாரண பொருட்கள் நுழையத் தடை! இஸ்ரேலின் திடீர் நடவடிக்கை!

Published : Oct 02, 2025, 11:17 PM IST
Greta Thunberg

சுருக்கம்

காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடல் வழியாக நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரை இஸ்ரேல் கடற்படை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளது. நிவாரணப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கடல் வழியாக எடுத்துச் சென்ற சுவீடன் நாட்டின் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரை இஸ்ரேல் கடற்படையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

நிவாரணப் பொருட்களுக்குத் தடை

இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் இந்தத் தாக்குதலை நிறுத்தக் கோரி சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு சர்வதேச நாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரண உதவிகளை இஸ்ரேல் ராணுவம் தடுத்து நிறுத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் காசாவில் மோசமான பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என அஞ்சப்படுகிறது.

இந்தச் சூழலில்தான், சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலில் கடல்வழியாகப் பயணம் மேற்கொண்டார். அவருடன் அமெரிக்க நடிகை சூசன் சாரண்டன் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சுமார் 40 படகுகளில் சென்றனர்.

தடுத்து நிறுத்திய இஸ்ரேல்

அவர்களின் படகுகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடல் எல்லைக்குள் நுழைந்தபோது, இஸ்ரேல் கடற்படையினர் அங்கு விரைந்து வந்து, கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரைத் தடுத்து நிறுத்தினர்.

அவர்கள் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களைப் பறிமுதல் செய்த இஸ்ரேல் கடற்படையினர், கிரேட்டா தன்பெர்க் மற்றும் குழுவினரை இஸ்ரேலில் உள்ள அஷோத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பணயக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக, ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என்று அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை சுமார் 65 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி
மோடி அழுத்தத்திற்கு அடிபணியும் தலைவர் அல்ல, இந்தியா வளர்ந்து வரும் சக்தி - புதின் புகழாரம்