
அமைதி என்பது மனதுக்கு இதமானது என்று சொல்வார்கள். ஆனால், பூமியிலேயே மிகவும் அமைதியான ஓர் அறைக்குள் சென்றால், அந்த அமைதி உங்களை பயமுறுத்தும்!
2015-ஆம் ஆண்டு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாஷிங்டன் மாகாணத்தின் ரெட்மாண்டில் உள்ள தனது தலைமையகத்தில் ஒரு அறையை உருவாக்கியது. கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தின்படி, இதுதான் உலகின் மிகவும் அமைதியான இடம். இந்த அறைக்கு 'அனெகோயிக் சேம்பர்' (Anechoic Chamber) என்று பெயர். இந்த அறைக்குள் ஒலி அளவு -20.35 dBA (டெசிபல்) என்று பதிவாகியுள்ளது. இது மனிதனின் கேட்கும் திறனுக்கும் மிகக் குறைவானது.
ஒரு மணிநேரம் கூட தாக்குப்பிடிக்க முடியாது!
சில நிமிடங்களிலேயே வெளிப்புற சத்தம் இல்லாமல் போக, உங்கள் உடலுக்குள் இருக்கும் சத்தம் கேட்க ஆரம்பிக்கும். முதலில் உங்கள் இதயத்துடிப்பு கேட்கும். பிறகு, உங்கள் எலும்புகள் சத்தம், ரத்தம் பாய்ந்து செல்லும் ஓசை, மற்றும் உங்கள் உடலின் உள் இயக்கங்கள் என எல்லாமே தெளிவாகக் கேட்கத் தொடங்கும்.
இந்த அறையின் நோக்கம், வெளியுலக சத்தங்களை நீக்கி, உங்கள் உடலின் சத்தத்தை மட்டும் கேட்கச் செய்வதுதான். இந்த அறையின் வடிவமைப்பாளர் ஹந்த்ராஜ் கோபால், "நீங்கள் உங்கள் தலையைத் திருப்பும்போது கூட, அந்த அசைவின் சத்தம் கேட்கும். நீங்கள் சுவாசிக்கும் சத்தம் கூட சத்தமாக ஒலிக்கும்" என்று கூறுகிறார்.
அமைதி ஏன் பயமுறுத்துகிறது?
நாம் அமைதியாக இருப்பதாக நினைக்கும் நூலகங்களில்கூட 40 டெசிபல் சத்தம் இருக்கும். ஆனால், மைக்ரோசாஃப்ட்டின் இந்த அறையில் எதிரொலி எதுவும் இல்லாததால் மூளை குழப்பமடைகிறது. சுற்றுப்புற ஒலிகள் இல்லாததால் சமநிலையை இழப்பதுடன், காதுகளில் ஒருவித ரீங்காரம் தொடர்ந்து ஒலிக்கும். இதனால், உள்ளே இருப்பவர்கள் ஒரு மணிநேரம் கூட தாக்குப்பிடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. இதுவரை அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மட்டுமே ஒருவர் இந்த அறையில் இருந்திருக்கிறார்.
அறையின் அமைப்பு...
அனெகோயிக் என்றால் "எதிரொலி இல்லாத" என்று பொருள். இந்த அறை ஆறு அடுக்கு கான்கிரீட் மற்றும் எஃகால் ஆனது. மேலும், வெளிப்புற அதிர்வுகளைத் தடுக்க அதிர்வு-தடுப்பு ஸ்பிரிங்கள் மீது இது கட்டப்பட்டுள்ளது. உட்புறத்தில், தரை, சுவர்கள், கூரை என அனைத்துப் பரப்புகளிலும் ஃபைபர் கிளாஸ் கூம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒலியை எதிரொலிக்காமல் உறிஞ்சி விடுகின்றன.
அதே சமயம், அமெரிக்காவின் மினியாபோலிஸில் உள்ள ஓர்ஃபீல்ட் ஆய்வகத்தில், ஸ்டீவன் ஜே. ஓர்ஃபீல்ட் வடிவமைத்த ஒரு போட்டி அறை, -24.9 dBA அளவை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.