இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்...!! 97 பேர் பலி

First Published Dec 8, 2016, 9:19 AM IST
Highlights


இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 97 பேர் பலியானார்கள், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கட்டிட இடிபாடுகளில் இன்னும் ஏராளமான மக்கள் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிடே ஜெயா மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு நேற்று அதிகாலை, தொழுகைக்கு மக்கள் தயாராகிக் கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென கட்டிடங்கள் குலுங்கி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவு

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 புள்ளிகளாகப் பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், தொழுகைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த மக்கள் அனைவரையும் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

உயிரிழப்பு

அதற்குகள் அந்த பயங்கர நிலநடுக்கத்தில் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு கடைகள் இடிந்து, விழுந்து, கட்டிடக் குவியல்களாக மாறின. இந்த இடிபாடுகளில் ஏராளமான மக்கள் சிக்கி அலறினர்.

இது குறித்து அறிந்து ராணுவத்தினர், மீட்புப்படையினர், தீயனைப்பு படையினர் என 10 ஆயிரம் பேர் மற்றும் 900 போலீசார் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அதன்பின் மீட்புப்பணியில் இறங்கினர். அதற்குள் 50-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

அதிகரிக்கும்

இது குறித்து அச்சே ராணுவ தலைவர் டடாங் சுலைமான் கூறுகையில், “ இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 97  பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

இந்த நிலநடுக்கத்தால் மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தெருவிலும், சாலைகளிலும் குழந்தைகளுடன் கண்ணீருடன் நிற்கின்றனர். மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதால், மீட்புப்பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு உணவு, குடிநீர், உடைகள் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

சாலையில் சிகிச்சை

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி அப்துல்லா கூறுகையில், “ நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடுபாடுகளில் சிக்கியிருந்த 200-க்கும்மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வு ஏற்படும் என்ற பயத்தால் ஏராளமான மக்கள் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு சாலையில் இருந்தவாரே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

இந்த பூகம்பத்தில் பல மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் கடுமையான சேதம் அடைந்துள்ளன. இதனால், தங்குவதற்கு கூட தற்காலிக குடில்கள் இல்லாமல் சாலையில் கொட்டும் பனியில் தவித்து வருகின்றனர்.

click me!