
“தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பாதிரியார் உயிருடன் இருக்கிறார்...?” - திடீர் வீடியோவால் பரபரப்பு
கேரள பாதிரியாரை, ஏமன் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ளனர். அவர், தன்னை காப்பாற்றும்படி இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வீடியோ அனுப்பியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர் தாமஸ் உழுனலில். பாதிரியார். கடந்த 2016ம் ஆண்டு ஏமன் நாட்டின் ஏடன் தெற்கு நகரில் உள்ள ஒரு காப்பகத்தில் தாமஸ் தங்கியிருந்தார். அப்போது, அங்கு வந்த ஐஎஸ் தீவிரவாதிகள், துப்பாக்கி முனையில் அவரை கடத்தி சென்றனர்.
பாதிரியார் கடத்தப்பட்ட சம்பவம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தாமஸை மீட்க உரிய நடவடிக்கை எடுப்பாக உறுதியளித்தார். ஆனால், பாதிரியார் தாமஸை, தீவிரவாதிகள் சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் ஏமன் இணையதள செய்தி ஒன்றில், ஒரு வீடியோ வெளியானது. அதில் பாதிரியார் தாமஸ், உடல் மெலிந்து காணப்பட்டார். நரைத்த தாடியும், கடும் சோர்வுடனும் காணப்பட்ட அவர், சில நிமிடங்கள் பேசினார். அதில், தன்னை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு செல்லும்படி கோரிக்கை விடுத்து இருந்தார்.
மேலும், தன்னை கடத்தி சென்ற தீவிரவாதிகள், நல்ல முறையில் கவனித்து கொண்டதாகவும், தற்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இறந்துவிட்டதாக கூறப்பட்ட பாதிரியார், தற்போது வீடியோவில் பேசிய காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.