சீனாவுக்கு பதிலடி கொடுக்க மோடி ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை..!! ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு

By Ezhilarasan Babu  |  First Published May 26, 2020, 7:36 PM IST

இந்திய படைகளை எந்தெந்த இடங்களில் நிறுத்த வேண்டும் என்பது குறித்து ராஜ்நாத்சிங் கேள்விகளை கேட்டதாகவும், பின்னர்  சீன ஆக்கிரமிப்புக்கு ராணுவம் எடுக்கும் பதில் நடவடிக்கைகளுக்கு தனது முழு ஆதரவை தெரிவிப்பதாகவும் ராஜ்நாத்சிங் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
 


லடாக்கில் சீனாவுடன் நடந்துவரும் எல்லை பதற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், முப்படைத் தளபதி பிபின் ராவத்  மற்றும் முப்படை தளபதிகளுடன்  ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  அதைத் தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  பிபின் ராவத் மற்றும் சீன விவகாரத்தை கையாண்டு வரும் படைத் தளபதிகளுடன் நீண்ட நேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.  கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து இந்திய எல்லையில் படைகளை குவித்து இந்தியாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கை  இந்தியா எந்த மாதிரியான எதிர் நடவடிக்கைகளை எடுக்கிறது என ஆழம் பார்க்கும் வேலை என கருதப்படுகிறது. இந்நிலையில்  இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில்,  இராணுவத்தளபதி எம்.எம் நாரவனே,  எல்லைக் கோட்டு நிலவரங்கள் குறித்து விளக்கியதாகவும்,  அப்போது இந்திய படைகளை எந்தெந்த இடங்களில் நிறுத்த வேண்டும் என்பது குறித்து ராஜ்நாத்சிங் கேள்விகளை கேட்டதாகவும், பின்னர்  சீன ஆக்கிரமிப்புக்கு ராணுவம் எடுக்கும் பதில் நடவடிக்கைகளுக்கு தனது முழு ஆதரவை தெரிவிப்பதாகவும் ராஜ்நாத்சிங் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest Videos

இந்தியா-சீனா இடையே கடந்த 5-ம் தேதி பாக்கொங் த்சோ ஏரிப் பகுதியில் நடந்த மோதலை அடுத்து இரு நாட்டுக்கும் இடையே சுமுகமான நிலையை உருவாக்க இதுவரை 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன,  ஆனால் அதில் எதிலும்  உடன்பாடு எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த விவகாரத்தில் சீன ராணுவத்தின் முக்கிய பிரச்சினை என்னவென்றால்,  இந்தியா தனது எல்லைப்பகுதியான 255 கிமீ டார்புக்-ஷியோக்-டிபிஓ சாலை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது,  இந்த சாலை பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது,  இது டெப்சாங் பகுதி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு எளிதில் சென்றடைய உதவும் சாலை ஆகும்.  மேலும் இந்த சாலை காரகோரம்  பாசுவரை நீண்டு முடிகிறது.  இதன்மூலம் இந்திய எல்லையில் ரோந்து பணிகளை  எளிதாக்குவதோடு அதன் ரோந்து எண்ணிக்கையும் அதிகரிக்க முடியும்.  இதற்கான பணிகள் வேகமாக  நடந்து வரும் நிலையில்,  சீனா இதை தடுத்த நிறுத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளது.  இந்த சாலை அமைக்கப்பட்டு விட்டால் இந்தியா சீனாவுக்கும் இடையே ஒரு போர் ஏற்படும் பட்சத்தில் இந்தியா எளிதில் எல்லை நோக்கி நகரவும், ராணுவத்தளவாடங்களை  தடையின்றி எல்லைக்கு கொண்டுவரவும், போர்காலத்தில் குடிநீர் உணவுப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க இந்த சாலை உதவும் என்பதால் சீனா இதை  தடுக்க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்தியாவை வம்பிழுத்து சாலை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் சீனா தற்போது இறங்கியுள்ளது. அதனால்தான் கல்வான் பகுதியில் இந்திய எல்லை மீறி விட்டதாக  ஒரு பொய் குற்றச்சாட்டை வைத்து தற்போது கால்வான் பள்ளத்தாக்கு பகுதி, பாங்கொங் த்சோ ஏரி பகுதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான படைகளை குவித்து வருகிறது. இந்தியாவும் அதற்கு இணையாக படைகளை குவித்து வருகிறது, இதனால் எல்லையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில்  இந்திய பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.  எல்லையில் சீனா படைகளை குவித்து வரும் நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில்,  இந்தியா தனது எல்லைக்குள் செய்துவரும்  உள்கட்டமைப்பு பணிகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிகிறது,  ஆனால் இந்தியா அதை ஏற்க மறுத்துள்ளது.  எல்லையில் இருந்து  படைகளை பின்வாங்குமாறு இந்தியா கூறியதற்கு,  இந்திய பிரதேசத்தில் இருந்து பின்வாங்க சீன படைகள் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவும் சீனப்படைகள் பின்வாங்கும் வரை தாங்களும் பின்வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சீனா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியா பதில் நடவடிக்கை எடுத்து வருவதால் என்ன செய்வது என தெரியாமல் சீனா விழி பிதுங்கி நிற்பதாக கூறப்படுகிறது. 

 

click me!