கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும், மற்றவர்கள் மத்தியில் இருமியதால் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தமிழ்செல்வம் ராமையா (64). இவர், கடந்த 2021ஆம் ஆண்டில் தனது வீட்டிற்கு வெளியே இருக்கும்போது, கொரோனா விதிமுறைகளை மீறி மாஸ்க் அணியாமல் இருந்த குற்றத்திற்காகவும், கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும் வேண்டுமென்றே தனது சக ஊழியர்கள் மத்தியில் இருமியதற்காகவும் அவருக்கு இரண்டு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது, தமிழ்செல்வம் ராமையா மீதான இரண்டு குற்றச்சாட்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. சம்பவம் நடைபெற்றபோது, தமிழ்செல்வம் ராமையா, சிங்கப்பூரில் உள்ள லியோங் ஹப் நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலை 6 மணியளவில் பணிக்கு லாக்-இன் செய்துள்ளார். தொடர்ந்து, தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக உதவி மேலாளரிடம் அவர் கூறியுள்ளார்.
இதனால், கொரோனா பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, இதுகுறித்து உதவி மேலாளரிடம் தெரிவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு அவர் பணிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, வேறு ஒரு நபரிடம் இருந்து இந்த விஷயத்தை அறிந்து கொண்ட உதவி மேலாளர் தனது சக ஊழியர்களிடமும் இதுபற்றி கூறியுள்ளார்.
ஆனால், தமிழ்செல்வம் உடனடியாக வீட்டுக்குச் செல்லவில்லை. அவரது கொரோனா சோதனை முடிவு தெரியாத அந்நிறுவனத்தின் ஓட்டுநர் ஒருவரை அழைத்துக் கொண்டு, கோவிட்-19 சோதனை முடிவைப் பற்றி உதவி மேலாளரிடம் தெரிவிக்க சென்றுள்ளார். இதனைக் கண்ட உதவி மேலாளர், தமிழ்செல்வம் ராமையாவின் அருகில் செல்ல வேண்டாம் என ஓட்டுநரை முதலில் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்செல்வத்தை அலுவலகத்தை விட்டு உடனடியாக வெளியேறச் சொல்லி சைகை செய்துள்ளார்.
இதையடுத்து, வாசலை நோக்கி சென்ற தமிழ்செல்வம், மீண்டும் திரும்பி, மாஸ்க் அணிந்து கொண்டே அலுவலக ஊழியர்களை நோக்கி இரண்டு முறை இருமியுள்ளார். இதனால், உதவி மேலாளர் உடனடியாக கதவை மூடினார். இருப்பினும், கதவை திறந்த தமிழ்செல்வம் தனது மாஸ்கை கழற்றி விட்டு மூன்றாவது முறையாக அலுவலக ஊழியர்களை நோக்கி இருமியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வெளியேறிய அவர், அடுத்த அறையில் இருந்த ஜன்னலை திறந்து 56 வயதான பெண் கிளார்க் ஒருவரை பார்த்து மாஸ்க் உடன் இருமியுள்ளார். அப்போது, ‘இந்தா கொரோனாவை வாங்கிக்கோங்க’ என்று மலாய் மொழியில் தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.
காலிஸ்தான் தலைவர் கொலைக்கு இந்தியா காரணமா? கனடா பிரதமர் குற்றச்சாட்டை நிராகரிக்கும் இந்தியா
தமிழ்செல்வத்தின் செயலால் நிறுவன ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். அந்த பெண் கிளார்க் இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், அவர் தனக்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு சென்ற தமிழ்செல்வத்தை சோதித்த மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்த நிறுவனத்தின் உதவி மேலாளர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையின்போது, காமெடிக்காக இருமியதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ்செல்வம் ராமையாவுக்கு இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.