ஆஸ்திரேலியாவில் இந்திய டிரைவர் உயிரோடு எரித்து கொலை

Asianet News Tamil  
Published : Oct 29, 2016, 06:13 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
ஆஸ்திரேலியாவில் இந்திய டிரைவர் உயிரோடு எரித்து கொலை

சுருக்கம்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய பஸ் டிரைவர் ஒருவர்  பயணிகள் முன்னிலையில் நேற்று உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் பஸ்ஸில் இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

டிரைவர், பாடகர்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மன்மீத் அலிஷர் என்ற மன்மீத் சர்மா. சிறந்த பாடகரான மன்மீத், பிரிஸ்பேன் சிட்டி கவுன்சிலில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று அந்நாட்டு நேரப்படி காலை 9 மணி அளவில் பிரிஸ்பேனின் பியோடெசர் பகுதியில் இருந்து 6 பயணிகளுடன்  மூர்வேல் பகுதியில் 3 பயணிகளை ஏற்றிக்கொள்ள புறப்பட்டது. பஸ்ஸை டிரைவர் மன்மீத் அலிஷர் ஓட்டினார்.

மர்ம பொருள்

அப்போது பஸ்ஸில் இருந்த 48 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், தீப்பிடித்து எரியக்கூடிய ஒரு ரசாயனப் பொருளை மன்மீத் உடலில் ஊற்றியதும் அவர் உடல் தீப்பற்றி எரிந்தது. பஸ்ஸில் அமர்ந்திருந்த பயணிகள் இந்த காட்சியைப் பார்த்ததும் அலறியடித்து அவசரக் கதவு வழியாக தப்பினர். இருந்தபோதிலும் இதில் 6 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மன்மீத்உயிரிழந்தார்.

ஒருவர் கைது

இது குறித்து பிரிஸ்பேன் நகர போலீஸ் ஆணையர் இயான் ஸ்டீவர்ட் கூறுகையில், “ இந்திய டிரைவர் மன்மீத் அலிஷர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 48-வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்துள்ளோம். . இதில் பஸ்ஸில் அமர்ந்திருந்த பயணிகள் 6 பேருக்கு மூச்சுத் திணறலும், லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கொலை குறித்து தெற்கு பிரிஸ்பேன் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இனவெறியா?

இனவெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை. அதேசமயம், இந்த சம்பவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அது தொடர்பான ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

இந்த சம்பவத்துக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு, இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்போம்.  மாநில போலீஸ் அதிகாரிகளும், தீவிரவாத தடுப்பு அதிகாரிகளும் தீவிர பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்'' எனத் தெரிவித்தார்.

துணிச்சலான டாக்சி டிரைவர்

பஸ்ஸில் இருந்த பயணிகளைக் காப்பாற்றிய டாக்சி டிரைவர் அகுக் யோக் கூறுகையில், “ பஸ்ஸில் தீப்பிடித்த உடன், பஸ் அருகே நடந்து சென்று கொண்டு இருந்த டாக்சி டிரைவர் அகுக் யோக் என்பவர்,பஸ்ஸின் பின்புறத்தில் உள்ள அவசரவழிக் கதவை உடைத்து திறந்து பயணிகளைக் காப்பாற்றினார். ‘ஹீரோ’ போன்ற அவரின் துணிச்சலான செயலால் பயணிகள் காப்பற்றப்பட்டனர்'' எனத் தெரிவித்தார்.

அரைகம்பம்

இந்த மன்மீத் அலிஷர் கொல்லப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு பிரிஸ்பேன் நகரில் உள்ள பஞ்சாப் சமூகத்தின் அதிர்ச்சியும், வேதனையையும் தெரிவித்துள்ளனர். மன்மீத் அலிஷருக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரிஸ்பேன் நகரில் இன்று கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

5 நாட்கள் போர் ஒத்தி வைப்பு.. யூ-டர்ன் அடித்த டிரம்ப்..! ஈரானிடம் இறங்கி வரும் அமெரிக்கா..?
பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு வருமா? கவலை வேண்டாம், நம்மகிட்ட 'பிளான்-B' இருக்கு - பிரதமர் மோடி