இந்தியாவின் தலை யாருக்கும், எந்த சூழ்நிலையிலும் வளைந்து கொடுக்காது..!! ராஜ்நாத் சிங் உறுதி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 3, 2020, 4:03 PM IST
Highlights

பிரச்சனை உரையாடலின் மூலம் தீர்க்கப்பட்டால் அதைவிட வேறு என்ன நல்ல விஷயம் இருக்க முடியும் என்றும்  கூறியுள்ள அவர் இந்தியாவின் நெற்றி யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் வளைந்து கொடுக்காது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

இந்திய-சீன எல்லையில் ஏராளமான சீன துருப்புகள் குவிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் தற்போதைக்கு எல்லையில் என்ன செய்யவேண்டுமோ அதை இந்திய ராணுவம் செய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை தணிக்க ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், ஜூன்-6ஆம் தேதி மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். இந்திய லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எல்லையில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் பாங்கொங் த்சோ ஏரிப்பகுதியை ஒட்டியுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனா ஏராளமான ராணுவத் துருப்புகளையும், போர் தளவாடங்களையும் குவித்து வருகிறது. 

இந்தியா அதற்கு பல்வேறு எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில்,  இது குறித்து தெரிவித்துள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  இந்திய-சீன எல்லையில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது உண்மைதான், அதைத் தொடர்ந்து கணிசமான எண்ணிக்கையிலான ராணுவ துருப்புகளை  இந்திய எல்லைக் கோட்டு பகுதிக்கு சீனா கொண்டு வந்துள்ளது, இந்தியாவும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாக செய்துவருகிறது என கூறியுள்ளார். மேலும்  இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர்  அளித்த பேட்டியில்,  எல்லை பதற்றம் குறித்து தற்போதைக்கு இராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, ஜூன் 6ஆம் தேதி மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும்,  இது குறித்து நான் ராணுவ அதிகாரிகளுடன் விரிவாக விவாதிக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து இருநாட்டு இராணுவ தளபதிகளுக்கு இடையிலான உரையாடல் தினசரி நடந்து வருகிறது. மேஜர் ஜெனரல்கள் மட்டத்திலும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது,  ஆனால் அதில் எந்த  உறுதியான தீர்வும் எட்டப்படவில்லை என்றார். 

இந்த விவகாரத்தை சீனாவும் தீவிரமாக சிந்திக்க வேண்டும்,  பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படாத நிலையில் இருநாடுகளுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு  விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது, அதே நேரத்தில்  இந்தியா யாருடைய இறையாண்மையையும் மீறாது,  இந்தியா தனது இறையாண்மையை மற்றவர்கள் மீறவும் அனுமதிக்காது என்றார். மேலும்  இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், சீனாவுடன்  இந்தியாவின் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும், பிரச்சனை உரையாடலின் மூலம் தீர்க்கப்பட்டால் அதைவிட வேறு என்ன நல்ல விஷயம் இருக்க முடியும் என்றும்  கூறியுள்ள அவர் இந்தியாவின் நெற்றி யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் வளைந்து கொடுக்காது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

click me!