சீனாவுடன் மீண்டும் போரா? எல்லைப் பகுதியில் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்திய ராணுவம்!!

By Dhanalakshmi G  |  First Published Aug 27, 2022, 2:42 PM IST

எல்லையில் லடாக் பகுதியில் தொடர்ந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுத்து வரும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் ஜோரவர் என்ற திட்டத்தின் கீழ், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ டேங்க் மற்றும் ட்ரோன்களை எல்லைப் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது.


சீனா தொடர்ந்து லடாக் மற்றும் அருணாசலப் பிரதேசம் பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக நிலங்களை ஆக்கிரமித்து, கட்டிடங்களை கட்டி வருவதாக அவ்வப்போது செய்தி வெளியாகி வருகிறது. மத்திய அரசும் இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், சீனாவிடம் இருந்து எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கு எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் இந்திய ராணுவம் உயர் பாதுகாப்பு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான மலைப்பகுதியில் மிகவும் உயரமான இடத்திற்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை, டேங்குகளை அனுப்பி உள்ளது. லடாக் பகுதியில் ஏற்கனவே முகாமிட்டு இருக்கும் சீனப் படைகளை எந்த நேரத்திலும் எதிர்கொள்ளவே இந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 350 டேங்க்குகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. குறைந்த எடையிலான இந்த வகை டேங்குகளை எளிதாக வான் வழியில் கொண்டு சென்று இலக்குகளை குறிவைக்க முடியும். இந்த டேங்க்குகள் மலைக் பகுதியிலும்  எளிதாக கையாளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

வெளியானது உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியல்... மீண்டும் முதலிடத்தில் பிரதமர் மோடி!!

மிகவும் உயரமான இடத்திலும் எதிரிகளை குறிவைத்து அழிக்கும் வகையில் ஸ்வார்ம் ட்ரோன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஆள் இல்லா ட்ரோன் வகையைச் சேர்ந்தது. சுற்றுச் சூழலுக்கு ஏற்ப தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தது இந்த வகை ட்ரோன். 

எல்லையில் கிழக்கு லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நுழைந்தது. இது இரண்டு நாடுகளுக்கு இடையே பெரிய அளவில் ராணுவ சண்டையை உருவாக்கி இருந்தது. இந்த சண்டையில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாயினர். சீன தரப்பிலும் பலியாயினர். 

தரைப்படை:
பொதுவாக குளிர்காலங்களில்தான் இந்தியாவை குறிவைத்து சீனா தாக்கி வருகிறது. எல்லையில் மலைப் பகுதியில் அதிகமான பனி உறைந்து இருக்கும் நிலையில், இதை தனக்கு சாதகமாக சீனா பயன்படுத்திக் கொள்கிறது. தற்போது மழைக்காலம் முடிந்து குளிர்காலம் வரவிருக்கிறது. இந்தியா விழித்துக் கொண்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை விரைந்து செய்து வருகிறது. தற்போதும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வடக்குப் பகுதியில் பிஜீங் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. சமாளிக்க தரைப் படையும் தேவை என்பதை மத்திய ராணுவ பாதுகாப்புத்துறை உணர்ந்துள்ளது. 

தைவான்: 
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 2,100 கி. மீட்டர் தொலைவிலான எல்லைப் பகுதி எப்போதும் பிரச்சனைக்குள்ளாகி வருகிறது. சீனா அவ்வப்போது இந்தியாவை சீண்டி வருகிறது. இந்தியா மட்டுமின்றி எல்லைப் பகுதியில் இருக்கும் நாடுகளையும் சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறது. தைவானை தனது நாட்டின் அங்கமாக சித்தரித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பலோசி தைவான் வந்து சென்றார். இதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது. அவர் வரமுடியாத அளவிற்கு வானில் போர் விமானங்களை சீனா பறக்கவிட்டது. பிலிப்பைன்ஸ் வழியாக தைவானுக்கு நான்சி சென்றடைந்தார். தைவான் சுயாட்சி நாடாக இருந்து வருகிறது. ஆனால், சீனா உரிமை கோரி வருகிறது. நான்சி பலோசி வந்து சென்றபின்னர், தைவான் கடற் பகுதியில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டு மிரட்டல் விடுத்து இருந்தது. ஏவுகணைகளையும் வீசி இருந்தது.

தென் சீனக் கடல்:
இதுமட்டுமில்லை. தென் சீனக் கடலிலும் 90 சதவீதம் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்த கடல் பகுதியில் செயற்கை தீவுகளையும், ராணுவ தளங்களையும் அமைத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, போர் கப்பலை இந்தப் பகுதிக்கு அவ்வப்போது அனுப்பி வருகிறது. தென் சீனக் கடல் பகுதி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சொந்தமானது என்று சர்வதேச தீர்ப்பாயம் கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்து இருந்தது. ஆனால், இந்த தீர்ப்பை சீனா மதிக்கவே இல்லை.

இந்தியா அமெரிக்க போர் பயிற்சி:
இந்த நிலையில்தான், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து சீனாவுக்கு மிரட்டல் விடும் வகையில், அக்டோபர் மத்தியில் போர் பயிற்சியில் ஈடுபட இருக்கின்றன. உத்தரகண்ட் மாநிலத்தில் அவ்லி என்ற இடத்தில் இந்த போர் பயிற்சி நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கும் சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 

இறுதி சடங்கில் உயிரோடு எழுந்து வந்த சிறுமி.. உறவினர்களுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !

click me!