முதற்கட்டமாக 500 முழு உடற்கவசங்கள் லே-வுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள படைப்பிரிவினர்க்கு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவு, ராணுவ துருப்புகளின் பாதுகாப்பை வலுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நம் வீரர்களுக்கு பாதுகாப்புக் கவச உடைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு சீன ராணுவத்தினர் முற்கம்பிகள் சுற்றப்பட்ட தடிகள், ஆணிகள் பூட்டப்பட்ட இரும்பு ராடுகள், கூர்மையாக ஆயுதங்கள், கூர்மையான கருங்கற்களை கொண்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது , மரணம் நிகழ்ந்தது உண்மை என ஓப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் இறந்தனர் என்பதை கூறவில்லை. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மோதலன்று எல்லையில் சீனர்கள் முற்கம்பி சுற்றப்பட்ட தடிகள், ஆணிகள் பூட்டப்பட்ட இரும்பு ராடுகள், கூர்மையாக ஆயுதங்கள், கூர்மையான கருங்கற்களை கொண்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர், அதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர், சுமார் 76 பேர் படுகாயமடைந்தனர், சீனாவின் இக்காட்டுமிராண்டி தாக்குதல் இந்திய வீரர்கள் எதிர்பார்க்காத ஒன்று என்பதால் பெரும் சேதத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கவும் அப்படி நடந்தாலும் அதற்கு பதலடி கொடுக்கவும் ராணுவம் உறுதி பூண்டுள்ளது. அதே வேளையில் நமது வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கான முதற்பட்டமாக வடக்கு கட்டளை பிரிவு ராணுவ வீரர்களுக்கு "ஆன்டி ராய்ட்" முழு உடல் கவசங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, பாலிகார்பனேட்டுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கவசங்கள் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்பு பொருட்கள், கற்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என்றும் முதற்கட்டமாக 500 முழு உடற்கவசங்கள் லே-வுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள படைப்பிரிவினர்க்கு வழங்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்த கவசங்களை உற்பத்தி செய்து வழங்கியுள்ளது. அந்த வகையில் இது குறித்து மூத்த ராணுவ ஆய்வாளர் ராணுவ வீரர்களுக்கு கழக கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் உடற் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது கவலையளிக்கும் விஷயம் என்றும், இது ஒரு ராணுவ வீரனை உள்ளூர் போலீஸ்காரரின் மனநிலைக்கு மாற்றும் செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இது குறித்து தெரிவித்துள்ள ராணுவ அதிகாரி ஒருவர்,எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு உடல் கவசங்கள் தரித்து நிற்க திட்டமிடப்பட்டுள்ளது, அடுத்த முறை இதுபோன்ற ஒரு சூழலை எளிதாக எதிர்கொள்ள முடியும் எனத் தெரிவித்த அவர், கடந்த மாதம் பாங்கொங் ஏரிக்கரையில் சீன ராணுவத்தினர் முள்வேளி சுற்றப்பட்ட தடிகளை பயன்படுத்தியபோது இந்திய வீரர்கள் திகைத்தனர் அதில் சிலர் காயம் அடைந்தனர், ஆனால் இனி அப்படி அல்ல, நவீன ஆயுதங்களின்றி எதிர் தரப்புக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் வகையிலான கூர்மையான ஆயுதங்கள் எதிர்கொள்ளவும் இந்திய ராணுவம் தயாராகிவருகிறது என்றார்.