இந்திய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..!! ரஷ்யாவில் இன்று பேச்சு வார்த்தை..!!

By Ezhilarasan Babu  |  First Published Sep 10, 2020, 11:59 AM IST

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன  வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்றிரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய  வன்முறை தாக்குதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து இரு  நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவியது, அதே நேரத்தில் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையிலிருந்து படைகளை பின்வாங்க ஒப்புக்கொண்டன. 

Tap to resize

Latest Videos

சர்ச்சைக்குரிய  கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீனா படைகளை பின்வாங்கினாலும், அது பல்வேறு இடங்களில் இருந்து பின் வாங்க மறுத்து வந்தது. இந்நிலையில் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த திங்கட்கிழமை சீன ராணுவத்தினர் அத்துமீறி மீண்டும் தாக்குதலில் ஈடுபட முயற்சித்தனர். இதை சீன ராணுவம் மறுத்து வந்த நிலையில்,  ஆதாரத்துடன் இந்திய ராணுவம் அதனை நிரூபித்தது. மேலும் பயங்கர ஆயுதங்களை தாங்கியவாறு சீன ராணுவத்தினர் எல்லையில் இருந்த புகைப்படமும் வெளியானது. இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாலை 6 மணிக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற பாதுகாப்பு துறை அமைச்சர்களுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து பேசினார். இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 8ஆம் தேதி ரஷ்ய தலைநகர்  மாஸ்கோ விற்கு விரைந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று புதன்கிழமை கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பிராந்திய ஒற்றுமை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இன்று மாலை சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்-யியுடன் சந்தித்து பேச உள்ளார். இந்திய, சீன நாடுகளுக்கு இடையிலான எல்லை விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இன்று மாலை 6 மணிக்கு சந்தித்து பேச உள்ளனர். கிழக்கு லடாக் பகுதியில்  நடைபெற்றுவரும் சர்ச்சைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

click me!