இலங்கைக்கு இந்தியா கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 4 பில்லியன் டாலர் அளவிற்கான உதவிகளை அளித்து இருக்கும் நிலையில் பெரிய அளவில் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டு வருகிறது.
இலங்கைக்கு இந்தியா கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 4 பில்லியன் டாலர் அளவிற்கான உதவிகளை அளித்து இருப்பதாகவும், தற்போது அந்த நாட்டில் அரசு மற்றும் தனியார் துறையில் முதலீடு செய்வது குறித்து திட்டமிடப்பட்டு வருவதாகவும் தி பிரின்ட் செய்தி நிறுவனத்துக்கு கொழும்புவில் அளித்திருக்கும் பேட்டியில் இலங்கைக்கான இந்திய உயர் கமிஷனர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் அளித்து இருக்கும் பேட்டியில், ''இலங்கையில் புதுப்பிக்கப்படும் ஆற்றல், துறைமுகம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், ஹைட்ரோகார்பன்ஸ் உள்பட பல்வேறு துறைகளில் இந்தியா முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறது. நீண்ட காலமாக இரண்டு நாடுகளுக்கும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆகாமல் இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
தற்போது இலங்கையில் பொறுப்பேற்று இருக்கும் புதிய அரசுடன் இந்தியா அரசு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி, சர்வதேச நிதி ஆணையத்தில் இருந்து இலங்கைக்கு நிதியுதவி கிடைப்பதற்கு ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது.
இலங்கைக்கு ஏற்றுமதி, சுற்றுலா, வெளிநாட்டு வாழ் இலங்கை மக்கள் மூலம் வருமானம் என்று மூன்று வழிகளில் வருமானம் கிடைக்கிறது. கொரோனா காரணமாக இலங்கையில் இந்த மூன்றும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பின்னடைவில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கு, முதலீடுகள் இதற்கு உதவியாக இருக்கும். இந்த நிலையில் இலங்கையில் பெரிய அளவில் முதலீடு செய்ய ஆலோசித்து வருகிறோம். வர்த்தகம் பெருகுவதற்கு, பெரிய அளவில் முதலீடு செய்வதற்கு, இரண்டு நாடுகளுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு ஏற்படுவதற்கு இந்தியா பங்காற்றி வருகிறது.
ஏற்கனவே இலங்கை அரசுடன் முதலீடு குறித்து பேச்சுவார்த்தை துவக்கப்பட்டுவிட்டது. முதலீடுகள் விரைவில் ஏற்படும். இந்தியாவில் இருந்து சில தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், இலங்கையின் முக்கிய துறைகளான உள்கட்டமைப்பு, மின்சாரம், ஹைட்ரோகார்பன்ஸ், விவசாயம், பால், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதலீடு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்தத் துறைகளில் இந்தியா வலுவாக இருக்கிறது. மேலும், இந்தியாவுக்கு அண்டை நாடாகவும் இலங்கை இருப்பதும் சாதகமாக இருக்கிறது. இதுதொடர்பாக இந்த மாதத்தின் துவக்கத்தில் என்டிபிசி லிமிடெட் குழு ஒன்று இலங்கைக்கு வந்திருந்தது.
இலங்கைக்கான உதவியை நிறுத்துங்கள்… ஜப்பானிடம் ரணில் கூறியது அம்பலம்!!
இந்தியாவில் இருந்துதான் இலங்கை 70 சதவீதம் அளவிற்கு உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்து வருகிறது. எனவேதான் இலங்கையில் மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இது அவர்களது தேவையை பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதி செய்யவும் உதவும். இதன் மூலம் அவர்களுக்கு அந்நிய செலாவணி கிடைக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சிலோன் மின்சாரக் கழகத்துடன் இணைந்து என்டிபிசி லிமிடெட் மின் உற்பத்தி நிலையம் அமைக்க உத்தேசித்து வருகிறது. இந்த நிறுவனம் இலங்கையின் கிழக்கில் சாம்பூர் பகுதியில் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.