
குஜராத் மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்தவில் 99.9சதவீதம் மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் தேறிய மாணவர்கள், அனைத்தையும் உதறி ஜெயின் துறவி ஆனார்.
வர்ஷில் ஷா என்ற தனது பெயரை ஸ்வரிய ரத்னா விஜய்ஜி மகராஜ் என மாற்றிக்கொண்டு 17-வது வயதில் துறவறத்தை தழுவினார்.
சூரத் நகரைச் சேர்ந்தவர்கள் அமிபென் ஷா, ஜிகர் பாய். ஜெயின் சமூகத்தை சேர்ந்த இருவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஒரே மகன் 17வயதான வர்ஷில் ஷா. 12-ம் வகுப்பு படித்த வர்ஷில் ஷா, சமீபத்தில் நடந்த பொதுத்தேர்வில் 99.9 சதவீதம் மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.
அடுத்து டாக்டராகவோ, பொறியாளராகவோ வரப்போகிறான் என்று பெற்றோர்க கனவு கண்ட நிலையில், திடீரென ஒரு நாள் தனது பெற்றோரிடம் தான் ஜெயின் துறவியாகப் போகிறேன் என்று வர்ஷில் ஷா கூறினார். ஆனால், இதைக் கேட்டதும் அவர்கள் மறுப்பு ஏதும் சொல்லாமல் மனதை கல்லாக்கிக்கொண்டனர்.
இதையடுத்து, சூரத் நகரில் இன்று முறைப்படி வர்ஷில் ஷாவுக்கு தீட்சை வழங்கும் பூஜைகள் நடந்தன. அதிகாலை 4.30 மணிக்கு வர்ஷில் ஷாவுக்கு புனித நீர் ஊற்றி உடலை சுத்தப்படுத்தினர் ஜெயின் துறவிகள். அதன்பின், வர்ஷில் ஷாவுக்கு புத்தாடைகள், நகைகள், கையில் பணம், குர்தா, பைஜாமா , பட்டாடைகள் உடுத்தி மாப்பிள்ளை போல் அழகு பார்க்கப்பட்டது.
ஏனென்றால் துறவியாகிவிட்டால், நகைகள், வண்ண பட்டாடைகள் உடுத்தக்கூடாது, வெள்ளை ஆடை மட்டுமே வர்ஷில் ஷா அணிய வேண்டும் என்பதால் இந்த சடங்குகள் செய்யப்பட்டன.
பின் அங்கிருந்து தபி ஆற்றங்கரைக்கு ஊர்வலமாக வர்ஷில் ஷா அழைத்து வரப்பட்டார். அங்கு அவரின் தலை முடி மழிக்கப்பட்டு, முறைப்படி ஜெயின் துறவிகள் அவருக்கு தீட்சை வழங்கினர். இதையடுத்து, வர்ஷில் ஷா இனி, ஸ்வரிய ரத்னா விஜய்ஜி மகராஜ் என அழைக்கப்படுவார்.
தங்களது மகன் ஜெயின் துறவியானது கண்டு அந்த மாணவரின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுவயது முதலே மிகவும் எளிமையாகவும், உயிர்களிடத்தில் அன்பாகவும் வர்ஷில் ஷா இருந்து வந்துள்ளார்.
இதனால், வீட்டில், தொலைக்காட்சி, பிரிட்ஜ் கூட பயன்படுத்தகூடாது என்று கூறிவிட்டார். ஏனென்றால், மின்சாரம் தயாரிப்பதற்காக, பல்வேறு உயிரினங்கள் கொல்லப்படுகின்றன என்பதால், தொலைக்காட்சி, பிரிட்ஜை பயன்படுத்தவில்லை. மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மின்சாரத்தை வர்ஷில் ஷா பயன்படுத்தி வந்தார் என அவரின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
17 வயதிலேயை ஸ்வரிய ரத்னா விஜய்ஜி மகராஜ் தனது ஆன்மீகப் பயணத்தை தொடங்கிவிட்டார்.