அணு ஆயுதங்களை கொண்ட நாடு முடிவுக்காக போராடினால், அது எல்லைகளை தாண்டி உலக நாடுகளை பாதிக்கும். அதனால் தான் மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன். பயமுறத்தவில்லை
தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதே கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிடாவிட்டால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது ஆண்டுக்கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய பிரதமர் மோடி, ’’130 கோடி மக்களின் பிரதிநிதியாக இங்கு பேசுவதில் மகிழ்ச்சி. 3000 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்த சிறந்த புலவர் கணியன் பூங்குன்றனார், உலகின் தொன்மையான தமிழ் மொழியில், யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று பாடியுள்ளார். இதுதான் இந்தியாவின் தனித்தன்மை.
தீவிரவாதம் இந்தியாவுக்கு மட்டுமான சவாலாக பார்க்கக் கூடாது. ஒட்டுமொத்த உலகத்திற்கும், மனித இனத்திற்குமான சவாலாக இருக்கிறது. எனவே பயங்கரவாதத்தை எதிர்க்க அனைத்து நாடுகளும் ஒன்று திரள வேண்டும். 125 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர், சிகாகோவில் நல்லிணக்கம் மற்றும் அமைதியின் தேவை அவசியம்’’எனப்பேசினார்.
அதன் பின்னர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசுகையில், ’’பாகிஸ்தானில் எந்த தீவிரவாத அமைப்பும் இல்லை. காஷ்மீரில் தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டால், காஷ்மீரில் ரத்தவெள்ளம் ஓடும். அணு ஆயுதங்களை கொண்ட நாடு முடிவுக்காக போராடினால், அது எல்லைகளை தாண்டி உலக நாடுகளை பாதிக்கும். அதனால் தான் மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன். பயமுறத்தவில்லை, எனது கவலையை தெரிவிக்கின்றேன். காஷ்மீரின் சுய ஆட்சிக்கான உத்திரவாதத்தை ஐ.நா சபையும் வழங்கியது. தற்போது ஐநா தங்களுக்கு குரல் கொடுக்குமா? என்று காஷ்மீர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்’’ எனத் தெரிவித்தார்.