"ஹிலாரி வெற்றி பெற்றால் ஐ.எஸ். தீவிரவாதிகள் பரவிவிடுவார்கள்" - டிரம்ப் குற்றச்சாட்டு

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 06:52 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
"ஹிலாரி வெற்றி பெற்றால் ஐ.எஸ். தீவிரவாதிகள் பரவிவிடுவார்கள்" -  டிரம்ப் குற்றச்சாட்டு

சுருக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றால், நாடு முழுவதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பரவிவிடுவார்கள். ஒபாமாவின் ஆட்சி அடுத்த 4 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுவிடும் என குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ந்தேதி நடைபெறுவதையடுத்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. 

நார்த் கரோலினா நகரில் டொனால்ட் டிரம்ப் நேற்றுமுன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றால், ஒபாமா அரசு மீண்டும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு விடும். நமக்கு பேரழிவு ஏற்படும். நாடுமுழுவதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பரவிவிடுவார்கள். நமது மக்களின் வரிகள் அனைத்தும் உயர்த்தப்பட்டுவிடும். 

ஹிலாரி ‘ஒபாமா கேர்’ திட்டத்தை மூன்று மடங்கு அதிகப்படுத்திவிடுவார். என்னுடைய நிர்வாகத்தில் நாப்டா ஒப்பந்தத்தை மறுசீராய்வு செய்து, நாட்டில் இருந்து வேலைவாய்ப்புகள் வெளியேறுவதைத் தடுப்பேன். மீண்டும் அமெரிக்காவை சிறப்பான நாடாக உயர்த்துவேன். நம் இளைஞர்களை விட்டுச் சென்ற வேலைவாய்ப்புகளை மீண்டும் பெற்றுத் தருவேன். 

போதைமருந்து கடத்தல், கொலைக் குற்றங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அகதிகளை ஹிலாரி விடுவித்துள்ளார். அவர்களை நான் ஆட்சிக்கு வந்தால், அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவேன். 

2-ம் உலகப்போரில் இருந்து அமெரிக்காவின் கப்பல்படை வலிமையின்றி இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால் 350 புதிய கப்பல்களைக் கட்டுவேன், கடற்படையை வலுப்படுத்துவேன்'' என்று தெரிவித்தார். 

ஜனநாயகத்தை அச்சுறுத்தும் டிரம்ப்- ஹிலாரி கடும் தாக்கு

ஒஹியோ நகரில் ஹிலாரி கிளிண்டன் தனது பிரசாரத்தில் பேசுகையில், “ எனக்கும், டிரம்புக்கும் நடந்த 3-ம் கட்ட விவாதத்தின் போது, தேர்தல் முடிவுகள் ஏற்றுக்கொள்வீர்களா எனக் கேட்டபோது, அவர் அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது எந்த அதிபர் வேட்பாளரும் செய்யாத ஒரு செயலாகும். அவரின் செயல் ஜனநாயகத்துக்கு மிரட்டல் விடுக்கும் செயலாகும். 

கடந்த 240 ஆண்டுகளாக நடந்து வரும் அமெரிக்கத் தேர்தலில், முடிவு எப்படியாக இருந்தாலும், ஆட்சிமாற்றம் அமைதியான முறையில் இருந்துள்ளது. தேர்தல் தோல்வியை அனைவரும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்தலைமைக்கும், சர்வாதிகாரத்துக்கும் வேறுபாடு உள்ளது. 

டிரம்பின் பொருளாதார கொள்கைகளும் மிகவும் ஆபத்தானது. வசதிபடைத்தவர்களுக்கு வரி குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளார். நாம் நடுத்தர வர்க்கத்தில் உள்ள வேலைக்குச் செல்லும் குடும்பத்தினர், சிறு வணிகர்கள், ஆகியவர்களாக முதலீடு செய்ய வேண்டும். அதுதான் பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும். நம்முடைய பொருளாதாரம் வசதி படைத்தவர்களுக்காக இல்லாமல், அனைவருக்கும் கிடைக்குமாறு இருக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!