இலங்கையில் தீவிரமடையும் போராட்டம்... அனைத்து காவல்துறையினருக்கான விடுமுறை ரத்து!!

By Narendran S  |  First Published May 9, 2022, 9:53 PM IST

இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அனைத்து காவலர்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அனைத்து காவலர்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். எனினும், ஐந்து நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடன சட்டம் ரத்து செய்யப்பட்டது. அவசரநிலை ரத்து செய்யப்பட்ட பின்பும், இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Latest Videos

undefined

மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களாக அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இலங்கை பொருளாதாரத்தின் மிகப்பெரிய சரிவுக்கு இந்த இருவர்தான் காரணம் என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் இன்று திடீரென இலங்கை அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் போராட்டம் நடந்த போது நடந்த மோதலால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்தது. இதனிடையே போராட்டகரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் கொழும்பில் உள்ள ராஜபக்சே கட்சி அலுவலகத்துக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் ஆளும்கட்சியின் எம்.பி  ஒருவர் உயிரிழந்தார். இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அனைத்து காவலர்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை காவலர்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

click me!