
வங்கதேசத்தில் மீண்டும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை வெடித்துள்ளது. இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் கூறி, இந்து இளைஞர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடல் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள பாலுக்கா உபசிலாவில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ‘பயனியர் நிட் காம்போசிட்’ (Pioneer Knit Composite) தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தீபு சந்திர தாஸ் (30) என்ற இளைஞர், உலக அரபு மொழி தின விழாவின் போது இஸ்லாம் மதம் மற்றும் இறைத்தூதர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் காட்டுத்தீயாக பரவியதை அடுத்து, ஆத்திரமடைந்த கும்பல் தொழிற்சாலைக்கு வெளியே திரண்டு தீபுவை சரமாரியாகத் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தீபு உயிரிழந்த பிறகும் ஆத்திரம் அடங்காத கும்பல், அவரது உடலை ஸ்கொயர் மாஸ்டர்பாரி பேருந்து நிலையப் பகுதிக்கு இழுத்துச் சென்றது. அங்கு ஒரு மரத்தில் உடலைக் கட்டி வைத்து மீண்டும் தாக்கியதோடு, கோஷங்களை எழுப்பியபடி உடலுக்குத் தீ வைத்தனர்.
பின்னர், உடலை டாக்கா-மைமென்சிங் நெடுஞ்சாலைக்குக் கொண்டு சென்று மீண்டும் எரிக்க முயன்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்ட தீவிரவாதத் தலைவரான ஷெரீப் ஒஸ்மான் ஹாடி உயிரிழந்ததைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் ஏற்கனவே வன்முறைச் சூழல் நிலவி வருகிறது. போராட்டக்காரர்கள் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லம் ஆகியவற்றையும் இலக்கு வைத்துத் தாக்கி வருகின்றனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய வங்கதேசத்தில் இத்தகைய வன்முறைகளுக்கு இடமில்லை. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது; அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களிடையே வெறுப்பையும் வன்முறையையும் தூண்டுபவர்களைப் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்." எனக் கூறியுள்ளது.
தற்போது தீபு சந்திர தாஸின் உடல் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாலுக்கா உபசிலா நிர்வாக அதிகாரி முகமது பிரோஸ் உசேன் உறுதிப்படுத்தியுள்ளார்.