விசா தேதி முடிந்தால் தங்க முடியாதா? அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

Published : Dec 18, 2025, 10:35 PM IST
US Visa

சுருக்கம்

அமெரிக்கா செல்லும் இந்தியர்கள், தங்கள் விசா காலாவதி தேதியை மட்டும் நம்பி அங்கு தங்கிவிட வேண்டாம் என அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. விசா விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் குடியேற்ற விதிகளில் கடும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விசா காலம் தொடர்பான ஒரு முக்கியமான விதியை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.

இந்தியர்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்காவிற்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள், தங்கள் விசா பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டுள்ள தேதியைக் கண்டு அதுவரை அமெரிக்காவில் தங்கிவிடலாம் என்று நினைக்க வேண்டாம் எனத் தூதரகம் எச்சரித்துள்ளது.

நீங்கள் அமெரிக்க விமான நிலையத்திலோ அல்லது துறைமுகத்திலோ தரையிறங்கும் போது, அங்கிருக்கும் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அதிகாரியே நீங்கள் எத்தனை நாட்கள் அங்கு தங்கலாம் என்பதை முடிவு செய்வார்.

பயணிகளின் பாஸ்போர்ட்டில் உள்ள விசா காலாவதியாகும் தேதிக்கும், அவர்கள் தங்கும் அனுமதிக்கும் சம்பந்தம் இல்லை. பயணிகள் தங்கள் தங்கும் காலத்தை அறிய, அவர்களது I-94 படிவத்தில் உள்ள 'Admit Until Date' (இந்த தேதி வரை அனுமதிக்கப்படுவர்) என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

எப்படிச் சரிபார்ப்பது?

பயணிகள் https://i94.cbp.dhs.gov என்ற இணையதளத்திற்குச் சென்று, தாங்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட கடைசி தேதி எது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

விமானம் அல்லது கடல் வழியாக வருபவர்களுக்கு மின்னணு முறையில் I-94 படிவம் வழங்கப்படும்.

சாலை வழியாகவோ அல்லது படகு வழியாகவோ நுழைபவர்கள் முன்கூட்டியே இணையதளத்தில் விண்ணப்பித்து நேரத்தைச் சேமிக்கலாம்.

இந்தியர்களுக்குப் பாதிப்பு

அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க எல்லைக் கட்டுப்பாட்டைப் பலப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து விசா விதிகளைக் கடினமாக்கி வருகிறார்.

பயங்கரவாதம் மற்றும் விசா காலம் முடிந்தும் தங்குவது போன்ற காரணங்களைக் கூறி, சமீபத்தில் ஆப்கானிஸ்தான், சிரியா உட்பட 39 நாடுகளுக்கு அவர் பயணத்தடையை (Travel Ban) விரிவுபடுத்தியுள்ளார்.

விசா காலம் முடிந்த பிறகு ஒரு நாள் கூடுதலாகத் தங்கினாலும் விசா தானாகவே ரத்தாகிவிடும் என்றும், விசா பெற பிணைத் தொகை (Bond) செலுத்தும் முறை வரலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருவதால், இந்தியப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பிச்சை எடுத்த 56,000 பாகிஸ்தானியர்களை வெளியேற்றிய சவுதி! விசா கட்டுப்பாடுகளை விதித்த அமீரகம்!
இத்தாலியில் மலையில் ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள்! 21 கோடி ஆண்டுகள் பழமையானது!