
அமெரிக்க அதிபர் தேர்தலின் சமீபத்திய கருத்துக்கணிப்பில் டொனால்டு ட்ரம்பை விட ஹிலாரி கிளின்டன் முன்னிலையில் உள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவ. 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் முக்கியக் கட்சிகளான குடியரசுக் கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகின்றனர்.
இந்த இரு பிரதான கட்சிகளைத் தவிர லிபர்டேரியன் கட்சி, பசுமைக் கட்சி என்னும் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நவ. 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏபிசி செய்திகள் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இணைந்து சமீபத்திய தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டன், டொனால்டு ட்ரம்பை விட கூடுதல் ஆதரவை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
அதாவது, ஹிலாரி 47 சதவீத ஆதரவும், டொனால்டு ட்ரம்ப் 45 சதவீத ஆதரவும் பெற்றுள்ளனர்.
லிபர்டேரியன் கட்சி சார்பில் போட்டியிடும் கேரி ஜான்சன் 4 சதவீதமும்,
பசுமைக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜில் ஸ்டெயின் 2 சதவீதமும் ஆதரவு பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த வாரத்தை விட தற்போது ட்ரம்ப் 7 புள்ளிகள் ஆதரவைக் கூடுதலாக பெற்றுள்ளதாகவும், ஆனால் ஹிலரிக்கான ஆதரவு 3 புள்ளிகள் சரிந்துள்ளதாகவும் இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனின் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், ஹிலாரிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.