அரிசோனாவின் டெம்பேயில் உள்ள கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தில் நள்ளிரவுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் அரிசோனாவில் உள்ள பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக டெம்பே காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் நடந்துள்ளது. டெம்பேயில் உள்ள சதர்ன் அவென்யூ மற்றும் ப்ரீஸ்ட் டிரைவ் அருகே உள்ள ஜனநாயக தேசியக் குழுவின் அலுவலகம் சேதமடைந்துள்ளது.
undefined
“அலுவலகத்திற்குள் யாரும் இல்லை, ஆனால் அந்தக் கட்டிடத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களின் பாதுகாப்பு குறித்து இது கவலைகளை எழுப்புகிறது,” என்று பொது தகவல் அதிகாரி சார்ஜென்ட். ரியான் குக் நியூயார்க் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் சூழ்நிலைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக டெம்பே போலீஸ் துப்பறியும் நபர்கள் தீவிரமாக ஆதாரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். பிரச்சார அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திங்கட்கிழமை காலை தொழிலாளர்கள் வந்தபோது துப்பாக்கிச் சூட்டால் சேதம் ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். அலுவலகத்தின் முன் ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் உறுதிபடுத்தினர்.
சமீப நாட்களில் அலுவலகத்தில் மீது இரண்டாவது முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு, முன் ஜன்னல்கள் வழியாக துப்பாக்கி அல்லது பெல்லட் துப்பாக்கியால் குறிவைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இரண்டு சம்பவங்களிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட இரண்டு படுகொலை முயற்சிகளைத் தொடர்ந்து அதிபர் வேட்பாளர்களின் பாதுகாப்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய கொலை முயற்சி செப்டம்பர் 16 ஆம் தேதி புளோரிடாவின் வெஸ்ட் பாம் கடற்கரையில் உள்ள அவரது கோல்ஃப் மைதானத்தில் நடந்தது, டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது பாதுகாவர்கள் புதர்களில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஒருவர் பதுங்கியிருப்பதைக் கண்டனர். 58 வயதான ரியான் ரூத் என்ற சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோட முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். பின்னர் பாதுகாவலர்கள் புதர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தானியங்கி துப்பாக்கியை கண்டுபிடித்தனர்.
அதற்கு முன், பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டிரம்ப் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார். தாக்குதல் நடத்தியவர், 20 வயதான தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்பது தெரிய வந்தது. இவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டிரம்ப் மற்றும் மேலும் இருவர் காயம் அடைந்து இருந்தனர். குரூக்ஸ் இறுதியில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.