துருக்கி இரவு விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 39 பேர் கொலை 16 பேர் வெளிநாட்டு பயணிகள்; 69 பேர் படுகாயம்

First Published Jan 1, 2017, 6:30 PM IST
Highlights


துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அங்குள்ள இரவு விடுதியில் புகுந்து மர்மநபர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 16 வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்ட 39 பேர் கொல்லப்பட்டனர். 69 பேர் படுகாயம் அடைந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்

இஸ்தான்புல் நகரில் உள்ள ரெய்னா இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காகசிறப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அங்கு ஏராளமான ஆண்களும், பெண்களும் புத்தாண்டை வரவேற்று ஆடல், பாடலுடன் உற்சாகத்தில் இருந்தனர். நள்ளிரவு 1.45 மணி அளவில், கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து இருவர் இரவு விடுதிக்குள் புகுந்தனர்.

துப்பாக்கி சூடு

வாசலின் நுழைவாயிலில் ஒருபோலீஸ்காரரும், பொதுமக்கள் ஒருவரும் நின்று இருந்தனர். அவர்கள் மீது முதலில் அந்த மர்மநபர்கள் தங்களிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அதன்பின், இரவு விடுதிக்குள் புகுந்த 2 மர்மநபர்களும், தங்களிடம் இருந்த துப்பாக்கியால், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதைப்பார்த்த இரவு விடுதியில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர், சிலர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விடுதி அருகே இருந்த போஸ்போரஸ் நதிக்குள் குதித்தனர். மிகக் கொடுரமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

16 பேர் வெளிநாட்டவர்

இது குறித்து துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு கூறுகையில், “ புத்தாண்டு கொண்டாட ரெய்னா இரவு விடுதிக்கு வந்த அப்பாவி மக்கள் மீது நடந்த இந்த துப்பாக்கி சூடு பயங்கரவாதிகளின் செயலாக இருக்கும் என சந்தேகிக்கிறோம். இந்த துப்பாக்கி சூட்டில் மொத்தம் 39 பேர் கொல்லப்பட்டனர். அதில்  21 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 16 பேர் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள், 5 பேர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள். காயம் அடைந்த 69 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விரைவில் பிடிபடுவர்

தாக்குதல் நடத்திய அந்த மர்மநபர்கள் தப்பிவிட்டனர். அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அந்த நபர்கள் பிடிபடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நதிக்குள் குதித்த பலரை தேடும் முயற்சியில் மீட்புப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.

2 பேர் அல்லது ஒருவரா?

துருக்கி நாட்டைச் சேர்ந்த டோகன் செய்தி நிறுவனம் கூறுகையில், “ கிறிஸ்துமஸ் தாத்தா ஆடை அணிந்து வந்த இருவர் இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர் என்று தெரிவித்தபோதிலும், ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினாரா அல்லது 2 பேர் நடத்தினார்களா என்பது அரசு உறுதி செய்யவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் அரபி மொழியில் பேசினார்கள் என்று கூறினர்'' என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

பாதுகாப்பு அதிகரிப்பு

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் முதல் பிரான்ஸின் பாரிஸ் நகர் வரை, பிரேசில் ரியோ நகர் முதல் லண்டன் நகர் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

துருக்கி நகரின் இஸ்தான்புல் நகரில் 17 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தும், இந்த தாக்குதல் நடந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு குர்து தீவிரவாதிகள், மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் அந்நாட்டில் ஏராளமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!