ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கானுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற பெண் சமூக ஆர்வலர் பங்கேற்று முழக்கமிட்டார்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் . இவர் தனது சிறுவயது முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் குழந்தைகள் திருமணம், பெண் ஆணவக் கொலைகள் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.
கைபர் பக்துன்வா, பலூசிஸ்தான் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் பழங்குடி இனத்தவர்களான பஷ்தூன் இன பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுவரும் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகைப்படங்களை ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதனால், குலாலாய் இஸ்மாயில் மீது நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்காக தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து, தலைமறைவாக வாழ்ந்து வந்த குலாலாய் இஸ்மாயில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் பாகிஸ்தானில் இருந்து தப்பிச்சென்று அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. சபை வளாகத்துக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் பங்கேற்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
மேலும், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிறுபான்மையினரான பஷ்தூன், சிந்து, பலூஸ் போன்ற மக்களுக்கு எதிராக ராணுவம் அடக்குமுறைகளை கையாள்கிறது. மனித உரிமைகள் மீறப்படுகிறது என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குலாலாய் இஸ்மாயில் தெரிவித்தார்.