
மரணம் தவிர்க்க முடியாதது. இருந்தாலும் உலகம் முழுவதும் பலர் சாவை வென்று வாழ்வதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதில் மும்முரமாக உள்ளனர். பிரபல சிலிக்கான் வேலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் ஜான்சன், வயது முதிர்வு எதிர்ப்பு முறையின் மூலம் தனது உயிரியல் ரீதியான வயது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று கூறுகிறார்.
இதை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் சென்றிருக்கிறது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான டுமாரோ பயோ (Tomorrow Bio). முழு உடலையும் கிரையோபிரெசர்வேஷன் (Cryopreservation) முறையில் உறைய வைத்து, எதிர்காலத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பிறகு மீண்டும் உயிர் கொடுப்போம் என்று அந்த இந்த நிறுவனம் கூறுகிறது.
மரணத்திற்குப் பிறகு முழு உடலையும் பாதுகாக்க ரூ. 1.8 கோடியும், மூளையை மட்டும் பாதுகாக்க விரும்பினால் ரூ.67.2 லட்சமும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று இந்த நிறுவனம் கூறுகிறது.
கிரையோபிரெசர்வேஷன் (Cryopreservation) முறையில் இறந்தவரின் உடல் மைனஸ் 198 டிகிரி செல்சியஸ் குளிரில் 'பயோஸ்டாசிஸில்' செய்து வைக்கிறது. இதன் மூலம் அனைத்து உயிரியல் செயல்பாடுகளும் காலவரையின்றி நிறுத்தப்படும். மைனஸ் 198 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அடைய, இறந்தவரின் உடல் திரவ நைட்ரஜன் நிரப்பப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட எஃகு கொள்கலனில் தொடர்ந்து 10 நாட்களுக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்படும் உடல்களை எதிர்காலத்தில் இறந்தவரை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படும் போது உயிர்ப்பிக்க முடியும் என்றும், இறப்புக்கான காரணத்தை அறிந்து சிகிச்சையும் அளிக்கப்படும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
டுமாரோ பயோ தனது இணையதளத்தில், "எவ்வளவு காலம் உயிர் வாழ வேண்டும் என்பதை மக்கள் தாங்களே முடிவு செய்யக்கூடிய உலகத்தை உருவாக்குவதே இந்த நிறுவனத்தின் நோக்கம்" என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 6 பேர் கிரையோபிரிசர்வேஷனின் கீழ் தங்கள் உடலைப் பாதுகாப்பாக வைக்க பணம் செலுத்தியுள்ளனராம். ஐந்து செல்லப்பிராணிகளும் கிரையோபிரிசர்வேஷனின் வைக்க பதிவ செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 650 க்கும் மேற்பட்டவர்கள் காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறார்களாம்.
இதுபற்றி டுமாரோ பயோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஃபெர்னாண்டோ அஜெவெடே பினேர் (Fernando Azevedo Pinheir) கூறுகையில், "நம் காலத்திலேயே சிக்கலான உயிரினங்கள் பாதுகாப்பாக கிரையோபிரிசர்வேஷன் செய்யப்பட்டு, மறு உயிர் பெறுவதைக் காணக்கூடும்" என்று சொல்கிறார்.
ஒரு நபர் இறந்தவுடன் எங்கள் நிறுவனம் வேலையைத் தொடங்குகிறது என்று கூறும் பினேர், பல்வேறு ஐரோப்பிய நகரங்களில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள் உடல்களை சுவிட்சர்லாந்துக்குக் கொண்டு செல்லும் என்று விளக்குகிறார். பெர்லைன், ஆம்ஸ்டர்டாம் மற்றும் சூரிச் ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்துக்கு தனி குழுவும் செயல்பட்டு வருகிறது.
கிரையோபிரிசர்வேஷன் (cryopreservation) என்றால் என்ன?
உயிர்களின் செல்கள், திசுக்கள், உறுப்புகள் உள்ளிட்டவற்றை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்க உறைய வைக்கும் முறை கிரையோபிரிசர்வேஷன் என அழைக்கப்படுகிறது.
ஆனால், கிரையோபிரெசர்வேஷன் என்பது உறைபனி நிலையில் இருந்து வேறுபட்டது. உடல் பனிக்கட்டியாக உறைவதைத் தவிர்க்க ஒரு சிறப்பு கிரையோபுரோடெக்டன்ட் (திரவ நைட்ரஜன்) பயன்படுத்தப்படுகிறது.