
இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, கடந்த மாதம் காலமானார். அவர், தனது 33 வயது காதலியான மார்டா ஃபேசினாவின் பெயரில் மட்டும் சுமார் 100 மில்லியன் யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.900 கோடி மதிப்பிலான சொத்துகளை உயில் எழுதி வைத்து விட்டு காலமானதாக தெரிய வந்துள்ளது. மூன்று முறை இத்தாலியின் பிரதமராக இருந்த சில்வியோ பெர்லுஸ்கோனியின் சொத்து மதிப்பு 6 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சில்வியோ பெர்லுஸ்கோனி நிறுவிய ஃபோர்ஸா இத்தாலியா எனும் கட்சியை சார்ந்த மார்டா ஃபேசினா, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சில்வியோ பெர்லுஸ்கோனியுடன் உறவில் இருந்தார். ஃபேசினாவை, சில்வியோ பெர்லுஸ்கோனி சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், தனது மரணப் படுக்கையில் ஃபேசினாவை தனது மனைவி என அவர் குறிப்பிட்டார்.
ஃபோர்ஸா இத்தாலியா எனும் கட்சியை 1994ஆம் ஆண்டில் தொழிலதிபரான சில்வியோ பெர்லுஸ்கோனி நிறுவினார். அந்த கட்சியின் உறுப்பினராக உள்ள மார்டா ஃபேசினா, கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முதல் இத்தாலிய நாடாளுமன்றத்தின் கீழ் அவை உறுப்பினராக உள்ளார்.
அதேசமயம், சில்வியோ பெர்லுஸ்கோனியின் வர்த்தக சாம்ராஜ்யம் அவரது மூத்த பிள்ளைகளான மெரினா மற்றும் பியர் சில்வியோ ஆகிய இருவரால் கவனித்துக் கொள்ளப்படுகிறது. சில்வியோ பெர்லுஸ்கோனி தொழிலில் நிர்வாகப் பதவிகளை வகித்து வரும் அவர்கள் இருவரும், Fininvest family holding நிறுவனத்தில் 53 சதவீத பங்குகளை தங்கள் வசம் வைத்துள்ளனர்.
மேலும், 100 மில்லியன் யூரோக்களை தனது சகோதரர் பாவ்லோவுக்கும், 30 மில்லியன் யூரோக்களை தனது ஃபோர்ஸா இத்தாலியா கட்சியின் முன்னாள் உறுப்பினர் மார்செல்லோ டெல் உட்ரிக்கும் சில்வியோ பெர்லுஸ்கோனி உயில் எழுதி வைத்துள்ளார்.
119 ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வந்த புத்தகம்! அமெரிக்க நூலகத்தில் நிகழ்ந்த அதிசயம்!
ஊடக அதிபர், தொழிலதிபர், பிரதமர் என பல பத்தாண்டுகளாக இத்தாலிய பொது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சில்வியோ பெர்லுஸ்கோனி, கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அப்போது அவருக்கு வயது 86.
சில்வியோ பெர்லுஸ்கோனி எழுதி வைத்திருந்த உயில், அவரது ஐந்து குழந்தைகள் மற்றும் பிற சாட்சிகள் முன்னிலையில் கடந்த வாரம் வாசிக்கப்பட்டது. “நிறுவனத்தில் கிடைக்கும் பங்குகளை எனது குழந்தைகள் மெரினா மற்றும் பியர் சில்வியோ ஆகியோருக்கு சமமாக பிரித்துக் கொடுக்கிறேன். மீதமுள்ள அனைத்து சொத்துகளையும் எனது ஐந்து குழந்தைகளான மெரினா, பியர் சில்வியோ, பார்பரா, எலியோனோரா மற்றும் லூய்கி ஆகியோர் சமமாக பங்கிட்டு கொடுக்கிறேன்.” என அவர் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
வரி மோசடி குற்றச்சாட்டில் அரசியலில் இருந்து ஆறு ஆண்டுகள் தடை செய்யப்பட்டதற்கு முன்பு இத்தாலியின் வலதுசாரி பிரதமராக சில்வியோ பெர்லுஸ்கோனி மூன்று முறை பதவி வகித்துள்ளார். ஒரு காலத்தில் தன்னை இயேசுவோடு ஒப்பிட்டுக் கொண்டவர் அவர். இத்தாலியின் நீண்ட காலம் பிரதமராக இருந்த போதிலும், பல்வேறு அவதூறுகளை அவர் எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.