ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக குரங்கு அம்மை நோய்த்தொற்றை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக குரங்கு அம்மை நோய்த்தொற்றை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டுமுதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 12 நாடுகளில் 80 பேருக்கு பரவியுள்ளது. மேலும் உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக குரங்கு அம்மை நோய்த்தொற்றை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறுகையில், உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவுவதை கண்காணித்து வருகிறோம். அதே சமயம் உள்ளூர் தொற்றுநோயியல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். வைரஸ் பரவுவதைத் தடுக்க நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மையங்களிலும் சந்தேகத்திற்கிடமான நோய் பாதிப்புகளை புகாரளிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நோயாளிகளைக் கண்டறிவதற்கான துல்லியமான வழிமுறைகளை நாங்கள் அமைத்துள்ளோம். மே 24 நிலவரப்படி , உலக சுகாதார அமைப்பு 250 க்கும் மேல் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் குரங்கு அம்மைநோய் தொற்றுகளை பதிவு செய்துள்ளது.
இது முக்கியமாக மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் உருவாகியுள்ளது. எப்போதாவது மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் நெருங்கிய தொடர்பு மூலம் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது. காயங்கள், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் மற்றும் அசுத்தமான படுக்கை போன்றவை மூலம் வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது என்று தெரிவித்துள்ளனர். மேலும் தெற்கு ஆபிரிக்க பகுதியில் இருந்து சுற்றுலா வந்த 29 வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.