ஃபிடல் காஸ்ட்ரோ இறுதிச் சடங்கு : ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்

First Published Nov 29, 2016, 10:35 AM IST
Highlights


கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், ஏழு எம்.பி.க்கள் அடங்கிய குழு, இன்று கியூபா செல்கிறது.

கியூபாவில், மாபெரும் மக்‍கள் புரட்சியின் மூலம் அந்நாட்டின் ராணுவ சர்வாதிகாரத்தை முறியடித்து புதிய அரசை நிறுவியவர் ஃபிடல் காஸ்ட்ரோ. பொதுவுடைமை தத்துவத்தின் அடிப்படையில் ஆட்சி புரிந்து, உலகின் கவனத்தை ஒட்டு மொத்தமாக ஈர்த்த காஸ்ட்ரோ, தனது 90-வது வயதில் கடந்த 25-ஆம் தேதி காலமானார்.

இதனையடுத்து, ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில், ஏழு எம்.பி.க்கள் அடங்கிய குழு, இன்று கியூபா செல்கிறது.

எம்.பி.க்கள் குழுவில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை பா.ஜ.க உறுப்பினர் திரு. ராமென் தேக்கா, முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினருமான திரு. ஆனந்த் சர்மா, தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை துணைத் தலைவரும், அ.இ.அ.தி.மு.க உறுப்பினருமான டாக்‍டர். மு.தம்பிதுரை, மாநிலங்களவை இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் திரு. D.ராஜா, மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் திரு. சீதாராம் யெச்சூரி, ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை பிஜு ஜனதா தள உறுப்பினர் திரு. ஜினா ஹிகாகா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் திரு. ஜாவேத் அலி கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர், இன்று காலை டெல்லியில் இருந்து கியூபா தலைநகர் ஹவானாவுக்கு தனி விமானத்தில் செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ளன.

காஸ்ட்ரோ மறைவையொட்டி, கியூபா முழுவதும் ஒன்பது நாட்களுக்கு அந்நாட்டு அரசு துக்கம் அனுசரித்துள்ளது. அவரது உடல் கடந்த சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரது அஸ்தியின் ஒரு பகுதி, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கியூபா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. வரும் 4-ம் தேதி, சாண்டியாகோ நகரில், காஸ்ட்ரோவின் கல்லறைக்கு அஸ்தி கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

click me!