பிடல் காஸ்ட்ரோ அஸ்தி நாடு முழுவதும் ஊர்வலம்

First Published Nov 28, 2016, 10:51 AM IST
Highlights


கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல் தகனம் செய்யப்பட்டது. அவருடைய அஸ்தி நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

அமெரிக்காவுக்கு மிக அருகில் அமைந்த தீவு நாடான கியூபாவின் பிரதமராகவும், அதிபராகவும் சுமார் 50 ஆண்டு காலம் பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோ. கம்யூனிச கொள்கைகளில் பிடிப்பு கொண்டவர். அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக திகழ்ந்த அவர். உடல்நல குறைவு காரணமாக 2008ல் ஆட்சியை தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். கியூபா மக்களும் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் தலைநகர் ஹவானாவில் பிடல் காஸ்ட்ரோவின் உடல் நேற்று எரியூட்டப்பட்டது. பின்னர் அவருடைய அஸ்தி ஒரு கலசத்தில் சேகரிக்கப்பட்டு, கியூபா அரசு சார்பில், டிசம்பர் 4ம் தேதி வரை துக்கம் அனுசரிப்பதால், காஸ்ட்ரோவின் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.ஹ

சர்வாதிகாரி பாடிஸ்டாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக 1953ம் ஆண்டுபிடல் காஸ்ட்ரோ தனது புரட்சியை தொடங்கிய தென்கிழக்கு நகரான ‘சாண்டியாகோ’வுக்கு அந்த அஸ்தி கலசம் இறுதியாக கொண்டு செல்லப்படுகிறது.

பின்னர் 4ம் தேதி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு, அவர் புரட்சியை தொடங்கிய இடத்தில் அஸ்தியை அரசு மரியாதையுடன் புதைக்கின்றனர். இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நாளன்று லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து பிடல் காஸ்ட்ரோவின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என கூறப்படுகிறது.

click me!