
புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில், சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ஸ்கி சுற்றுலா நகரமான Crans-Montanaவில் ஒரு பாரில் ஏற்பட்ட பெரும் வெடிப்பு, பலரின் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் உச்ச நேரத்தில், அதிகாலை சுமார் 1.30 மணிக்கு ‘லெ கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) என்ற பாரிலில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ நேரத்தில் அங்கு பெரும் கூட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. வெடிப்பின் காரணம் தற்போது வரை தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வாலிஸ் கான்டன் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் காயிதன் லத்தியோன், “வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பலர் காயமடைந்துள்ளனர், மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தி நிறுவனம் ஏஎஃப்பிக்கு தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணை தொடக்க நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
போலீஸ் தகவலின்படி, அந்த நேரத்தில் பாரில் 100-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக நம்பப்படுகிறது. பெரும்பாலானோர் விடுமுறை கொண்டாட்டத்திற்காக வந்த சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் புகழ்பெற்ற ஸ்கி ரிசார்ட் பகுதி என்பதால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு இருந்தனர்.
சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத வீடியோக்கள், பாரில் தீப்பற்றி எரியும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படை, போலீசார் மற்றும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பல ஹெலிகாப்டர்களும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக தனி உதவி எண் தொடங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணமாக, சம்பவம் நடந்த பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளது. மேலும் Crans-Montana மீது தற்காலிக விமானப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உள்ளூர் ஊடகங்கள் நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளே தீவிபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், வெடிப்பின் துல்லியமான காரணம் குறித்து போலீஸார் இதுவரை எந்த உறுதியான தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.