பிரதமர் கலந்துகொண்ட மாபெரும் பேரணியில் குண்டுவெடிப்பு!!

First Published Jun 23, 2018, 5:36 PM IST
Highlights
explosion at rally for new ethiopian prime minister


எத்தியோப்பியாவில் அந்நாட்டு பிரதமர் கலந்துகொண்ட கூட்டத்தில் குண்டு வெடித்ததில் பலர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் பிரதமர் அபை அகமது அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அபை அகமது கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அந்நாட்டின் தலைநகரான அடீஸ் அபாபாவில் இன்று நடந்த மாபெரும் பேரணியில் பிரதமர் அபை அகமது கலந்துகொண்டு பேசினார். 

பிரதமர் அபை பேசி முடித்தவுடன் குண்டு வெடித்தது. பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பேரணியில் குண்டு வெடித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

எத்தியோப்பியர்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு இது என்று பிரதமர் அபை அகமது தெரிவித்துள்ளார்.

மற்ற கண்டங்களுடன் ஒப்பிடுகையில் பொருளாதாரத்தில் பின்னடைந்த ஆப்பிரிக்காவில் ஓரளவிற்கு பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடு எத்தியோப்பியா. அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற அபை அகமது, பல்வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். முடக்கப்பட்ட ஏராளமான டிவி சேனல்கள், இணையதளங்கள் மீதான தடையை நீக்கினார்.

மக்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக வளர்ந்து  வரும் அபை அகமதுவிற்கு எதிராக இந்த குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் எனவும் தகவல்கள் கிடைக்கின்றன. 
 

click me!