வெறிபிடித்து ஆடிய நேபாள Gen Z... முன்னாள் பிரதமரின் மனைவி தீயில் கருகி பலி!

Published : Sep 09, 2025, 07:23 PM IST
Rajyalaxmi Chitrakar, the wife of Nepal's ex-prime minister Jhalanath Khanal died

சுருக்கம்

நேபாளத்தில் நடக்கும் போராட்டங்களின்போது முன்னாள் பிரதமர் ஜாலநாத் கானலின் மனைவி ராஜ்யலக்ஷ்மி சித்ரகர் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தீ வைத்ததால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேபாளத்தில் நடந்து வரும் Gen Z தலைமுறை இளைஞர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ஜாலநாத் கானலின் மனைவி ராஜ்யலக்ஷ்மி சித்ரகர் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தீ வைத்ததால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காத்மாண்டுவின் டல்லு பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. தீ விபத்தில் பலத்த காயமடைந்த ராஜ்யலக்ஷ்மி சித்ரகர், கீர்த்திபூர் தீக்காய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பிரதமர் ராஜினாமா, அமைச்சர்கள் தப்பியோட்டம்

சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை எதிர்த்து வெடித்த இந்தப் போராட்டங்கள், அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் மேலும் தீவிரம் அடைந்தன. பிரதமர் இல்லத்திற்கும் தீ வைக்கப்பட்ட நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஒலி செவ்வாய்க்கிழமை அன்று உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்தார்.

பிரதமரின் நிதி அமைச்சர் விஷ்ணு பிரசாத் பௌடெல் (65) தலைநகரின் தெருக்களில் போராட்டக்காரர்களால் விரட்டி அடித்து தாக்கப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நிலைமை மோசமடைந்ததையடுத்து, அமைச்சர்களை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு நேபாள ராணுவம் கொண்டு சென்றது.

போராட்டங்களின் பின்னணி

சமூக ஊடக நிறுவனங்கள் நேபாள அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுப் பதிவு செய்யாததால், பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்கு அரசு தடை விதித்தது. இது ஆயிரக்கணக்கான இளைஞர்களை வெகுண்டெழச் செய்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந்த போராட்டம் அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் வலுப்பெற்றது.

போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த மோதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் சமூக ஊடகத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இருந்தாலும், அரசின் மீதான அதிருப்தி காரணமாக போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது குடிமக்களை நேபாளத்திற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?