
உலகையே உலுக்கிய பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில், பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரின் குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் மீது விசாரணை நடத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மற்றும் அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியைச்(பி.டி.பி.) சேர்ந்த பலர் உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மொசாக் பொன்சேகா
பனாமா நாட்டில் உள்ள மொசாக் பொன்சேகா நிறுவனம், கருப்பு பணத்தையும், கணக்கில் வராத சொத்துக்களையும் வைத்துள்ள வி.ஐ.பி.கள், சர்வதேச அரசியல் தலைவர்கள், வி.ஐ.பி.கள் ஆகியோர் பாதுகாப்பாக பதுக்கி வைக்க போலியான நிறுவனங்களைத் தொடங்கி முதலீடு செய்து உதவியது.
இது குறித்து ஆய்வு செய்த சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் அமைப்பு, இந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தை மார்ச் மாதம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இதில் வெளிநாடுகள் பலவற்றில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரின் பிள்ளைகள் மர்யம், ஹசன், ஹூசைன் ஆகியோர் முதலீடு செய்து இருப்பது தெரியவந்தது.
கோரிக்கை
இந்த விவகாரம் வெளியானதில் இருந்து, இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என இம்ரான்கான் கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை பிரதமர் நவாஸ்ஷெரீப்பும், அவரின் குடும்பத்தினரும் தொடர்ந்து மறுத்து வந்தனர்.
விசாரணை
இந்நிலையில், இம்ரான்கான் மற்றும் அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த மனு அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அன்வர் ஜாகீர் ஜமாலிதலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அந்த மனு மீதான விசாரணை நடக்கும் போது, பலஅமைச்சர்கள், மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், கட்சியினர், ஊடகத்தினர் என ஏராளமானோர் கூடியிருந்தனர்.
ஆணையம்
அப்போது நீதிபதிகள் கூறுகையில், “ பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் பிரதமர் நவாஸ்ஷெரீப்புக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம். இதற்காக தனியாக ஒரு விசாரணை ஆணையம், நீதிபதி தலைமையில், உச்சநீதிமன்ற அதிகாரத்துடன் அமைக்கப்படும்.
இந்த விவகாரத்தில் இந்த ஆணையம் எதையெல்லாம் விசாரணை நடத்தலாம் என்பது குறித்து அரசும், மனுதாரர்களும் தங்கள் கருத்தை அளிக்க வேண்டும். இதில் அரசுக்கும், மனுதாரர்களுக்கும் கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால், நீதிமன்றம் அது குறித்து முடிவு செய்யும். இந்த விசாரணையை நாள்தோறும் நடத்துவதற்கு கூட நீதிமன்றம் தயாராக இருக்கிறது'' என உத்தரவிட்டனர். மேலும் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
அதேசமயம், இம்ரான்கான் தலைமையில் அவரின் பி.டி.பி. கட்சியினர் இன்று நடத்த இருந்த போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை.